சனி, டிசம்பர் 01, 2007

சிறுகதை 2: பிடிவாதக்காரி!

அம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மமா... அடிவயிற்றில் கணவன் விட்ட உதை, அப்படியே வலியின் வார்த்தைகளாய் மாறி காற்றில் கலந்து விட்ட தன் தாயை கூப்பீட்டபடியே சுவரோரம் விழுந்தாள் மல்லிகா...
சுயநினைவுடன் இருப்பது கணவனின் தொடர்ந்த ஏச்சு அவளுக்கு நினனவூட்டியது.
ஏண்டி இவளே, இது ஒண்ணும் பட்டணம் இல்லடி... கிராமம். அதுவும் மலைக்கிராமம். கருக்கல்ல வெளிய போயிட்டு தாமசமா வந்தாலே காதுவச்சு, கண்ணு வச்சு பெருசா பேசுற ஜனங்கடி. நீ என்னடான்னு டவுனுக்கு வேலைக்கு போயிட்டு வருவேன்னு சொல்ற. அடியேய் நான் சம்பாதிச்சுக் கொண்டுவர்றது ஒழுங்கா வச்சு குடித்தனம் நடத்திக்கோ. இனியொருவாட்டி வேலைக்கு போறேன்னு சொன்ன மவளே சாக்குலகட்டிக் கொண்டுபோய் மலைக்குமேல வச்சு கொளுத்திவுட்டுட்டு வந்துருவேன்... வார்த்தைகளில் கொலைவெறியுடன் சாராய நெடியும் கலந்தே வந்தது.

ஏய்ய்ய்... இந்தாய்யா பெரிய துரை மாதிரி பேசுற... நீ சம்பாதிக்கிற காசு உனக்கு சாராயத்துக்கே பத்தாது... பேச்ச மட்டும் பாரு. யோவ்... நான் எவ்வளவு நாளும் பட்டினி கெடப்பேன். ஆனா புள்ளைங்க... நம்ம சுகத்துக்கு பெத்துக்கிட்டு அதுகலயும் வேதனப்படச் சொல்றியா.
ஏதோ எங்க அப்பனும், ஆத்தாலும் என்னை படிக்க வச்சமாதிரி அதுகளயும் நாலெழுத்து படிக்க வைக்கணும். அதுக்கெல்லாம் பணம் வேணும்யா. அதுக்குத்தான்யா வேலைக்கு போறன்னு சொல்றேன்...

ஏண்டி நாயே! நான் இம்புட்டு தூரம் சொல்லிக்கிட்டு இருக்கேன். எதுத்தா பேசுறே. உன்னைய வேலைக்கு அனுப்புனா ஊர்க்காரப்பயலுவ எம்மேலத்தாண்டு நாக்கு மேல பள்ளைப்போட்டு பேசுவானுவ. பொண்டாட்டிய வேலைக்கு அனுப்பு அந்தகாசுல குடிக்கானுன்னு சொல்லுவானுக. ஏய்... எங்குடும்பத்துல ஒரு பொட்டச்சி கூட வேலைக்கு போனதும் கிடையாது. இது மாதிரி பேசுறதும் கிடையாது. உன்னை... இப்படியே விடக்கூடாது. இந்த விறகுக்கட்டையை தூக்கிட்டு வந்து அடிச்சே கொல்லுற....
சாராயப் போதை அவன் கோபத்தை இன்னும் கொளுத்திப்போட கொல்லையில் கிடந்த விறகை எடுக்கப்போனவன் , கால்தடுக்கி கீழே விழுந்தான்.
அம்ம்ம்ம்ம்மா.... அவன் அலறலில் ஊரும் கூடியது. உறவும் கூடியது.
நல்லாத்தான் இருந்தான். பாவிப்பய போதையில கல்லு மேல விழுந்து நெத்திப்போட்டுல கல்லடிச்சு அங்கேயே செத்துப்போவான்னு யார் கண்டது. இனி மல்லிகாவுக்கும் அவ குழந்தைகளுக்கும் யாருதான் ஆதரவோ! சாவுக்கு திரண்ட கூட்டம் சல்லடை வார்த்தைகளை விதைத்துவிட்டுப் போனது....

.......... அம்மா, என்னம்மா சீக்கிரம் வந்துட்டீங்க.
மாலையிட்ட கணவனின் போட்டோ முன்பு முதல்மாதச் சம்பளத்தை வைத்தவள் நினைவலைகளில் இருந்து நனவுலகம் மீண்டாள்.

புதன், நவம்பர் 28, 2007

சிறுகதை 1: மயில்வாகனன்

''எல்லோரும் நலம் வாழ நான் பாடுவேன்... நான் வாழ யார் பாடுவார்...'' பண்பலை வரிசை வழியாக காற்றில் தவழ்ந்து வந்த பாடலில் கவனம் செலுத்திக் கொண்டிருந்த வாட்ச்மேன் , வாசலில் கிறீச்சிட்ட சொகுசுக் காரின் சப்தம் கேட்டு ஓடோடிச் சென்று கதவைத் திறந்து விறைப்பாக சல்யூட் அடித்தார்...
என்ன வாட்ச்மேன் பாட்டு ரொம்பவும் சலனப்படுத்திடுச்சோ! என்றபடியே காரிலிருந்து இறங்கினார் பளிச்சிடும் வேட்டி சட்டையில் மயில்வாகனன். நெற்றியில் ஒளிவிடும் திருநீற்றுப் பட்டை அவரின் கடவுள் பக்தியை பறை சாற்றியது. கூடவே உயர்நாகரிகத் தோற்றத்துடன் ஒரு தம்பதியும் இறங்கியது.

பங்களாவின் முகப்புத் தோற்றமே அந்தத் தம்பதியை வியக்க வைக்க மயில்வாகனன் முகமெல்லாம் மகிழ்ச்சி. ரொம்பத் திட்டமிட்டு கட்டப்பட்ட வீடு இது. அனுபவத்துக்கு மரியாதை கொடுக்கும் வகையில் என்ஜீனியர் பிளான் இல்லாமல் கட்டிட மேஸ்திரியோட பிளான்ல கட்டியிருக்கோம். இந்த ஈ.சி.ஆர். சாலையில் கட்டியிருக்குற எத்தனையோ பங்களாவுக்கு மத்தியில் இதனோட சிறப்பே தனி.

என்ன பண்றது எல்லாரும் அமெரிக்காவிலேயே குடிமக்கள் அந்தஸ்து கிடைச்சதனால அங்கேயே இருந்துட்டாங்க. அதனாலத்தான் இந்த பங்களாவ விக்கிறோம்.
எங்களுக்கு பிடிச்சிருக்கு. பணத்தை ஒரே காசோலையில கொடுத்துடுறோம். இந்தாங்க... சொல்லிவிட்டு சொகுசுக்காரில் ஏறிக்கொண்ட தம்பதிக்கு கை அசைவு காட்டியபடி தனது கையில் அவர்கள் அளித்த தரகு பணத்துடன் தன் குடிசைக்கு விரைந்தார் மயில்வாகனன்.

சனி, நவம்பர் 24, 2007

வெட்கப்படாம சிரிச்சு வையுங்க!

பயணி: கண்டக்டர் , பஸ்ல சீட்டெல்லாம் கிழிஞ்சுப்போய் கெடக்குதே? கண்டக்டர்: யோவ்! டிக்கெட்ட கிழிக்கிறதுமட்டும்தான் என் வேலை...
----------------
மனனவி: போரடிக்கிற இந்தப்படத்தையும் எப்படிங்க பொறுமையாப் பார்த்துட்டு இருக்கிறீங்க!

மனைவியை பார்த்து ஒரு நக்கல் சிரிப்பு சிரிக்கிறார் கணவர்.
---------------
நண்பன் 1: டேய், இவ்வளவுதூரம் பழகியும் கடைசியில் உன் கல்யாணத்துக்கு என்னைக் கூப்பிடாம விட்டுட்டியேடா!

நண்பன் 2: உங்கிட்ட அவ்வளவுதூரம் பழகுனதுனாலத்தான் உன்னைக் கூப்பிடலை!
--------------

செவ்வாய், நவம்பர் 13, 2007

என்னத்த சொல்ல... எல்லாத்தையும் சொல்லலாம்!

டிரிங்...டிரிங்... வணக்கம். இது உங்கள் பிக் எப்.எம். 92.7ன்ரகசிய சினேகிதி நேரம். உங்கள் வாழ்க்கையின் ரகசியங்களை மனம் விட்டு பேசுங்க. தீர்வு காணுங்க.

ஹலோ... மேலம் நான் ........... பேசுறேன் மேடம்...

சொல்லுங்க...

மேடம் என் லவ்வருக்கு நாளைக்கு (13-11-2007) கல்யாணம். அவர் என்னத்தான் கட்டிக்குவேன்னு இருந்தாரு. அவங்க வீட்டுல கட்டாயப்படுத்தி அவருக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறாங்க. அப்படியே கல்யாணம் பண்ணுனாலும் அந்தப் பெண்ன்ண தொடமாட்டேன்னு என்கிட்ட சத்தியம் பண்ணியிருக்காரு...

ஐயோ... என்னம்மா... இப்படிச் சொல்றீங்க. நீங்க கல்யாணம் பண்ணாட்டியும், கல்யாணம் பண்ணப்போற அந்தப் பொண்ணோட வாழ்க்கையை நினனச்சுப்பாருமா!

மேடம்... அவர் என்னைத் தொட்டுட்டார் மேடம். அவருக்கு நான் தான் இஷ்டம். நாளைக்கு வரைக்கும் டைம் இருக்கு. எப்படியும் அவரைத்தான் கல்யாணம் பண்ணிப்பேன்...

நீங்க உங்க முயற்சியை கைவிட்டுடாதீங்க. நீங்களே அவரை கல்யாணம் பண்ணுங்க. இன்னொரு பொண்ணோட வாழ்க்கை தொலையாம பார்த்துக்கங்க. உங்க அப்பா, அம்மாவைக் கூப்பிட்டுப் போய் பேசுங்க... பெஸ்ட் ஆப் லக்....

நேயர்களே உங்களுக்கான பாடல்....
...........................

ஹலோ! பிக் எப்.எம். ரகசிய சினேகிதியா!

ஆமா... சொல்லுங்க... என்ன உங்கப் பிரச்னை!

மேடம் நான் ஆவடியிலிருந்து சுமதி பேசுறேன். எனக்கு கல்யாணம் ஆகி 2 வருஷம் ஆகப்போகுது. 1 வயசுல ஒரு குழந்தை இருக்குது. ஆரம்பத்துல என் மேல பாசமா இருந்த கணவன் இப்போ அப்படியில்லை. குடிக்கிறார். அடிக்கிறார். என்னை சரிவர "கண்டுக்கிறதே" இல்லை.
இப்படி சோகமாக இருக்கும் போது எனக்கு தெரிஞ்ச ஒருத்தருக்கிட்ட என் கஷ்டத்தைச் சொன்னேன். அவரு ஆறுதலாகப் பேசியது எனக்கு பிடிச்சு அவருகிட்ட நல்லப் பழகி ஒருநாள் என்னையும் அவருகிட்ட கொடுத்துட்டேன். ஆனால் எனக்கு மனசு கவலையாயிடுச்சு.
என் வீட்டுக்காரர்கிட்டயும் இதை சொல்லி மன்னிப்புக் கேட்டேன். அவரோ எந்தப்பதிலும் சொல்லல. ஆனா எதையும் கண்டுக்கலை. இது என்னை ரொம்ப சங்கடப்படுத்திக்கிட்டு இருக்கு மேடம்...

சுமதி நீங்க செஞ்ச தப்பை எப்ப உணர்ந்தீங்களோ அப்பவே திருந்திட்டீங்க. சின்ன வயசு அப்படி ஏதாவது தோணிருக்கலாம். இனிமே அந்தமாதிரி எதையு நினைக்காதீங்க. உங்க கணவரை அன்பால திருத்துங்க. நல்ல டாக்டருக்கிட்ட கூட்டிக்கிட்டு போங்க. வாழ்க்கையைபுதுசா தொடங்குங்க....

இதோ உங்களுக்கான பாட்டு................
...........................

ஹலோ மேடம், நான் தி.நகரிலிருந்து ரமேஷ் பேசுறேன். நான் கார் டிரைவரா இருக்கேன். மூணு வருஷமா ஒரு பொண்ணை லவ் பண்ணினேன் மேடம். ஆனா அந்தப் பொண்ணு வேற் ஒருத்தன்கிட்ட பேசுறதா என் நண்பர்கள் சொன்னாங்க. விசாரிச்சப்ப அவ இரண்டுவருஷமா அவனன லவ் பண்றாளாம். நான் எவ்வளவோ சொல்லியும் கேட்கலை. என் காதலை ஏத்துக்க மாட்டனுட்டா. இந்த நினைப்பில் கார் ஓட்டிக்கிட்டு போகும்போது வண்டி ஆக்ஸிடெண்ட் ஆகி எனக்கு லேசா அடியும் பட்டுடுச்சி.
இப்ப அவ கல்யாணம் செய்துக்கிட்டு போயிட்டா. நான் பித்து பிடித்த மாதிரி நடந்துக்கிறதா என் நண்பர்கள் சொல்றாங்க....

இங்க பாருங்க... நீங்க காதலிச்சவங்க நல்ல வாழணும்னு நினைக்கிறது நல்லது. அந்தப் பொண்ணை மறந்துட்டு சொந்தமா கார் வாங்கணும், சம்பாதிச்சு முன்னேறனும்னு நினனங்க. உங்க நண்பர்கள் முன்னாடி நல்லா வாழ்ந்து காட்டுங்க... பை...





............. கடந்த 12-11-07 இரவு 11.30 மணிக்கு மேற்கண்ட பண்பலை வரிசையில் நான் கேட்ட சில ரகசியத் தகவல்களும், பரிகாரங்களும் தான் இவை.

மனக்கவலையை பிறரிடம் சொல்லி மீள்வது நல்ல விஷயம் தான். ஆனால் இவர்கள் சொல்லும் விஷயங்கள் எல்லாமே பிற்ரால் தரப்பட்ட மனக்கவலையா? அல்லது தனக்குத்தானே தேடிக்கொண்ட மனக்கவலையா!
சரி... அதை விடுங்க... பெண்களே போன் செய்து நான் காதலருடன் 'படுத்தேன்", தெரிந்தவரிடம் 'படுத்தேன்" என்று பறைசாற்றுவத்... ஆம்பிள்ளைனா அப்படி இப்படித்தான் இருப்பான் என்பதிலும் சரிநிகர் ச்மானமாக பெண்கள் வந்து விட்டார்கள் என்பதைத்தான் காட்டுகிறது.

ஒரு நாள் நிகழ்ச்சியின் சில நிமிடங்கள் கேட்டதற்கே இந்தமாதிரியான விஷய்ங்கள் என்றால்.... முடியல... முடியல்... வடிவேல் பாணியில் மிரள வேண்டியது தான்.

தன் மீதான் தவறுகளையு, சூழ்நிலல தடுமாற்றங்களையும் என்று உணர்ந்து அதை தடுக்கிறோமோ அப்போது இதுமாதிரியான போன்கால்களுக்கு கண்டிப்பாக வேலையில்லை.

சனி, நவம்பர் 10, 2007

தமிழ் கூத்து!

தான் தான் தான்
என்பதை அறிய
இயலாதான் இயலாதான்!

அவன் அவன் அவன் அவன்
தன் கடன் தான் செய்தால்
தன்னாலே தானுயர்வான்!

புதன், நவம்பர் 07, 2007

தமிழண்ணனுக்கு நினைவாஞ்சலி!

இதழ் விரித்த சிரிப்பு
இன்னும் மறக்கவில்லை!
கண் பேசும் ஜாடையின் மயக்கம்
எனக்குத் தெளியவில்லை!
தளர் நடையாம் ஊன்றுகோல்
தெரிவிக்க வில்லை

அண்ணனாய் இருந்தவனே!
சிங்'காலன்' வந்தானோ
உயிர் பறிக்க!
பங்கருக்குள்ளும்
பாய்ந்த குண்டு
பயந்தே வெடித்ததோ
உனைக்கண்டு!

ஈழ மண்ணில்
நீ இட்டது
இறுதி முத்தம்!
உலகுள்ளவரை
ஒலிக்கும் அது
தமிழின் சத்தம்!

சனி, அக்டோபர் 27, 2007

சும்மா!

என் வாழ்விலும்
ஜொலிஜொலிக்குது
மின்மினிகள்...
நான் மட்டும்
கருவண்டாய்!

இருளில் மட்டுமே
வெளிச்சத்துக்கு
கூடுதல் மதிப்பு!

பகல் மட்டுமே
உலகம் இல்லை!

என்னையும் நேசிக்கிறாள்
அவள்... இரவில் மட்டுமே!
வெளிச்சத்தில்
நான் அவளுக்கு புரிவதில்லை

வியாழன், அக்டோபர் 25, 2007

தொடரும் வன்புணர்வுகள். விழிப்பது எப்போது?

சமீப நாட்களாக தமிழகத்தில் வன்புணர்வு நிகழ்வுகள் அதிகரித்து உள்ளது. அதுவும் 10 வயது சிறுமியை 14 வயது சிறுவன் வன்புணர்ந்தது, 13 வயது மனநிலை பாதிக்கப்பட்ட சிறுமியை 65 வயது முதியவர் வன்புணர்ந்தது, 12 வயது சிறுவனுடன் 35 வயது பெண்மணி உறவாடியது, 24 வயது மகனின் நண்பனுடன் உல்லாசமாக இருந்த 45 வயது பெண் என்றெல்லாம்... நாகரிகமாகி வரும் பட்டிணங்களில் மட்டும் இது போன்ற சம்பவங்கள் ஒருகாலத்தில் நிகழ்ந்தது. ஆனால் இன்று குக்கிராமங்களிலுக் இந்த அசிங்கங்கள் அரங்கேறச் செய்கிறது.

இந்த நிலைக்கெல்லாம் காரணம்... கூடா ஒழுக்கமும், கற்பு மறைத்தலும், பேராண்மை மறத்தலும் என்று அடுக்கிக் கொண்டே போகலாம். ஆனால் இதையெல்லாம் தாண்டி மனக்குதிரையின் கடிவாளம் தன்னை அடக்கத் தெரியா மானிடரும், கண்ணுக்குள் புகுந்து மனதை மாற்றும் தொலைக்காட்சி தொடர்களே முக்கியப் பங்கு வகிக்கிறது.

20 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை தொலைக்காட்சியின் ஒளிபரப்பை நம்பி ஊரிலிருக்கும் ஒரு சில தொலைக்காட்சிப் பெட்டிகளின் முன் கூட்டம் கூடும். ஆனால் இன்று நிலைமை வேறு.
வீட்டுக்கு வீடு கலர் டிவிப் பெட்டியே இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. பஞ்சபூதங்களுக்கு அடுத்து கேபிள் கனெக் ஷன்தான் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறது.
காலை10 மணிக்கெல்லாம் தொடங்கும் இந்த மெகா தொடர்கள் நம் மனங்களில் மெகா நிகழ்வுகளை நிகழ்த்தி விடுகிறது.
குடும்ப செண்டிமெண்ட் என்ற பெயரில் இரண்டு பொண்டாட்டி, கணவன் குடிகாரன், கணவன் கொலைக்கு பழிவாங்கும் மனைவி, தாய்க்கு உதவும் மகள், பணத்தைக் காட்டி பெண்களை வளைக்கும் வில்லன், பணக்கார வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு தன்னை இழக்கும் பெண், குறைந்தது 4 பெண்குழந்தைகள், வளர்ந்தபின் ஒருவருக்கொருவர் தினந்தோறும் சவால், சின்ன வயசில் அம்மா சோரம் போய் பிறந்த மகள் பெரியவளானதும் கேள்வி கேட்பாள், ................. இப்படித் தொடர்கிறது இந்த தொடர்கதைகள்.
மனசு ரிலாக்ஸாக இந்தத் தொடர்களை பார்ப்பதாகக் கூறிக்கொள்ளும் இவர்கள் மனதுக்குள் பாக்ஸ்பாக்ஸாக சமுதாயக் குற்றங்களை கொலுவேற்றி விடுகிறார்கள்.
விளைவு மேற்கூரிய வன்புணர்வு நிகழ்வுகளுக்கு சத்தமில்லாமல் அடித்தளமிடப்பட்டு விடுகிறது.

தொடக்கக் காலங்களில் கூட்டுக் குடும்ப வாழ்க்கைமுறையில் வீட்டில் பெரியவர்கள் இருந்து சிறியவர்களுக்கு வாழ்க்கையை வழிகாட்டி வந்தனர்.
ஆனால் என்று தனிக்குடித்தனம், ஆண் பெண் சம்பாதிக்கிறோம் அதனால் வாழ்க்கையை பகிர்ந்து கொள்ளப்போகிறோம் என்று கிளம்பினார்களோ அன்றே பிடித்துவிட்டது இந்தப் பின்னடைவு.
இதை அகற்ற என்ன செய்யப்போகிறோம்.
தீர்வு நாளைப் பாருங்கள்.

சனி, அக்டோபர் 13, 2007

இனிய ரம்ஜான் வாழ்த்துக்கள்1

ரமலான்!
சக மனிதனின் பசியை தாகத்தை உணரும் உன்னத நடைமுறையை நமக்கு கற்பிப்பதற்காக இறையோன் ஏற்படுத்திய ஒரு மாதம் ரமலான். இறைவனை உணர்வோம்! இயற்கையோடு இணைவோம்.
அனைவருக்கும் இனிய ரமலான் நல்வாழ்த்துக்கள்!

சனி, அக்டோபர் 06, 2007

இவர்களுக்கு ஆதரவு யார்?

பிறந்தாலும் அரசியல்வாதி வீட்டு நாயாகப் பிறக்க வேண்டும். கிராமத்து சொலவடைக்கு அர்த்தம் இல்லாமல் இல்லை.
இன்றைய செய்தித்தாளில் ஒரு பிட் செய்தி. நடிகர் அர்ஜுன் வீட்டு வேலைக்காரர் மரம் ஏறும் போது விஷவண்டு கொட்டியதால் மரணம் அடைந்தார்.
மரணம் அடைந்தவரின் குடும்பத்துக்கு வருத்தம் தெரிவிக்கும் அதேவேளையில் செய்தியின் காரணமாக அந்த வேலைக்காரர் குடும்பத்துக்கு அர்ஜுன் ஏதாவது நஷ்ட ஈடு கொடுத்தால் சந்தோஷம்.
ஆனால் இன்று எத்தனை வேலைக்காரர்களின் மரணம் வெளியே தெரியாமல் நடந்து வருகிறது, அவர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் மறைக்கப்பட்டு வருகிறது.
ஒரு கட்டிடத் தொழிலாளியாக இருந்தாலோ, சுமை தூக்கும் தொழிலாளியாக இருந்தாலோ அவர்கள் தங்களுக்கென சங்கங்கள் அமைத்து தங்களைக் காத்துக் கொள்கின்றனர்.
ஆனால் வீட்டுப் பணியாளர்களுக்கான சங்கங்கள் என்பது இதுவரை இல்லை என்றே தெரிகிறது.( ஒருவேளை இருந்தால் எனக்கு தெரிவியுங்கள்.)
தனது வருமானநிலை தெரிந்து தன்னால் இவ்வளவு சம்பளம் கொடுக்க முடியும் என்கிற போதுதான் வீட்டுப் பணியாளர்களை நியமித்துக் கொள்கிறார்கள்.
எனவே, இவர்களிடம் வீட்டுப்பணியாளர்கள் தங்களின் வேலை அளவுக்கான சம்பளம் மற்றும் இதர சலுகைகளைக் கேட்டுப் பெறமுடியும்.
இவர்கள் தங்களை ஒருங்கிணைத்துக் கொண்டால் அரசிடமிருந்து தங்களுக்கான நலவாரியங்களையும் அமைத்து கொள்ள முடியும்.

திங்கள், அக்டோபர் 01, 2007

பந்த் - தி.மு.க., அ.தி.மு.க. வெற்றி, மக்கள்?

சேது சமுத்திரத் திட்டத்துக்காக ராமர் பாலத்தை உடைக்கக் கூடாது என்று மதச்சாயம் பூசிய அரசியல் கட்சிகளும், அதற்கு ஒத்தூதும் கட்சிகளும் காட்டுக்கூச்சல் போட்டுக் கொண்டிருக்கின்றன. இதையும் தாண்டி சாது வேஷத்தில் திரியும் சில கபடதாரிகள் தலையைக் கொய்வோம் என்று கர்ச்சிக்கவும் செய்து கொண்டிருக்கின்றனர்.

மத்திய அரசோ வாயை மூடிக் கொண்டு மவுனம் காக்கின்றது. ஆனாலும் தமிழக மக்களின் வளத்தை கருத்தில் கொண்டு சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றியேத் தீருவது என்னும் திடத்தில் தமிழகத்தை ஆளும் கூட்டணிக் கட்சிகள் பந்த் நடத்த தீர்மானித்து அறிவிப்பும் வெளியிட்டது.

எதிர்க்கட்சிகளின் தடையை சென்னை உயர்நீதிமன்றம் மறுத்த போதிலும், டெல்லி உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டு பந்த்துக்கு இடைக்காலத் தடை விதித்தது.

அவ்வளவுதான் அ.தி.மு.க., 'தனது வழக்கின் காரணமாக பந்த்துக்கு தடை விதித்தது டெல்லி" என்று உரககக் கூவிக் கொண்டிருக்கிறது.

ஆனாலும் அசராத தமிழ்க ஆளும் கூட்டணிக்கட்சி அதிரடியாக உண்ணாவிரத அறிவிப்பை வெளியிட்டதோடு இன்று அதை வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருக்கிறது.

அரசு பஸ்கள் இன்று சென்னை உள்பட தமிழக மாவட்டங்களில் பெரும்பாலும் இயங்கவில்லை. தனியார் பேருந்துகள் மட்டும் அதுவும் அ.தி.மு.க. அனுதாபிகளின் பேருந்து மட்டும் சும்மா ஓடிக்கொண்டிருக்கிறது.

பந்த்துக்கு தடை வாங்கியதன் மூலம் அ.தி.மு.க.வும் வெற்றிபெற்றுவிட்டது, உண்ணாவிரதம் அறிவித்தும் பந்த்தைப் போன்ற சூழலை தமிகத்தில் நிலைநாட்டியதன் மூலம் தி.மு.க. கூட்டணியும் வெற்றி பெற்றுவிட்டது.

ஆனால் பந்த் இல்லை என்று பள்ளி கல்லூரிக்கு புறப்பட்டவர்களும், வேலைக்குசென்றவர்களும் பேருந்துகள் இயங்காத காரணத்தால்போங்கடா நீங்களும், உங்க அரசியலும் என்று வசைமாறிப் பொழிந்தபடி வீட்டுக்கு திரும்பிவந்துள்ளனர்.

சனி, செப்டம்பர் 29, 2007

'நான் பேசுகிறேன்'!

உடன் பிறப்பவன்
'நான்'-
கண்டு கொள்வதில்லை நீ!

கை வீசி, கால் அசைத்தும்
'என்' தடம்
தெரிவதில்லை!

வாழ்க்கைப் பயணத்தில்
பல மைல்கல் -
அப்போதும் உடன் 'நான்'

கானல் நீர்,
அடி வானம்
'என்' மீதான உன் உருவகம்

வாலிபம் களைந்ததால்
வாட்டம் -
'நான்' இளமையாய்!

தேடுகிறாய் 'முடிவை'
கண்ணாமூச்சி
காட்டுகிறேன்!

கானல் நீர், அடிவானம்
சத்தியம்
அழுது புலம்புகிறாய்!

'நான்'
அரவணைக்கிறேன்.

ஆத்திக அரசியல்

கிருஷ்ணன் சக்கரம்
கர்ணன் குண்டலம்
லட்சுமணன் கோடு
அர்ஜுனன் வில்
பீமனின் கதை
- இன்னும் இங்கே
இருக்குது ஆத்திக அரசியல்!

புதன், செப்டம்பர் 26, 2007

தலை காக்குமா தமிழகம்?

ராமர் பாலத்தை இடிப்பதாகக் கூறும் தமிழக முதல்வர் கருணாநிதியின் தலையைக் கொய்து வருபவர்களுக்கு எடைக்கு எடை தங்கம் தருவதாக கூறியிருக்கிறார் ராம்விலாஸ் வேதாந்தி.

தமிழைக்காக்க அன்று தண்டவாளத்தில் தலைவைத்தவர் என்று கருதப்படும் கருணாநிதியின் தலையை காக்க தமிழர்கள் என்னென்ன செய்யலாம்?