சனி, மார்ச் 29, 2008

நிவாரணம்

பொலபொலவென்று ஒருவாரமாக அழுத வானம் தன் நீலக் கூந்தலுக்கு வெண்மேக ஷேம்பு போட்டபடி சிரித்துக் கொண்டிருந்தது.
அடியே சண்டாளி, இப்படிப் பண்ணிப்புட்டியேடி.... உன் ஆதங்கம் அடங்குற அளவுக்கு அழுது தொலைச்சிட்டு, எங்க வயலு வரப்பெல்லாத்தையும் இப்படி தண்ணிக்காடாக்கிட்டியடி. விளைஞ்சி நின்ன உளுந்தெல்லாத்தையும் இப்படி உயிரோட உறிஞ்சிட்டியடி...
ஜலசமாதியான உளுந்து பயறை கையில் பிடித்தபடி வானத்தை பார்த்து தன் வறுமையை வசவுகளாக்கிக் கொண்டிருந்தான் சின்னையன்.
நான் என்ன நாலுகாசு பாக்கணும்னா விவசாயம் பண்றேன், என் வயிறு நெறஞ்சா போதும், மானம் மருவாதயோட ஒழச்சி பிழைக்கணும்னுதானடி வெள்ளாமை பண்றேன். அதவந்து காவு வாங்கிட்டியே.
இதுக்காக நான் கடனுக்கு வாங்குன பணத்தை எப்படி அடைக்கப்போறேன். எப்படி என் பொண்டாட்டி பிள்ளைகளை காப்பாத்தப் போறேன், இப்படி பண்ணிட்டியடி....
கலங்கிப் போய் கிடந்தவனின் தோளில் கை விழ திரும்பிப் பார்த்தான். பொன்னையன் அங்க நின்னுக்கிட்டிருந்தான். டேய் நம்ம சோகத்தை தீர்க்குறதுக்குதான் மந்திரி வந்திருக்காரு. வா அவருகிட்ட போவோம். நிவாரண உதவி தருவாரு.
நாளைய முதல்வர், வருங்கால பிரதமர்.. அவர்... இவர்.. அண்ணன்... தொண்டரடிபொடியின் பிளிறல்கள் காதைக் கிழித்தன.
சின்னான் இங்க வாங்க. மழையில பாதிக்கப்பட்டதா சொன்னாங்க. கவலைப்படாதீங்க, உங்கள மாதிரி பாதிக்கப்பட்டவங்கள கைகுடுத்து தூக்கி விடுறதுதான் நம்ம அரசாங்கம். இந்தாங்க நிவாரண நிதி வச்சிக்க. செக் நீட்டப்பட்டது. பிளாஷ் ஒளியில் சின்னானு, மந்திரியும் சிரித்தார்கள்.
மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மந்திரி நிதிஉதவி... 8 காலம் தலைப்பில் செய்தி வெளியானது.....

சார்! ஷாட் ஓ.கே...
அரசோட சாதனைப் பட்டியல் விளம்பரப் படத்துல இந்தக்காட்சியை சேர்த்துருங்க.....

கட்டளை போட்டபடி மந்திரி காரில் ஏறிப் போனார்.
கண்டிப்பா உனக்கு பியூன் போஸ்டிங் தந்துருவாங்க... விவசாயி சின்னாண்டியாக நடித்தவருடன் பேசியபடி செட்டைவிட்டு சென்றார் பொன்னையனாக வந்த டைரக்டர்.

.... வானம் தன் நீலக் கூந்தலுக்கு வெண்மேக ஷேம்பு போட்டபடி சிரித்துக் கொண்டிருந்தது.

வியாழன், மார்ச் 27, 2008

என் ஆசான்கள்

பள்ளிக்கூட நாட்கள் நினைவில் வந்ததும் என்னை திருத்திய, என்னைக் கவர்ந்த ஆசிரியர்களின் முகங்களும் என் மனக்கண் முன் வந்தது.
நான் படித்த தூய இருதய தொடக்கப்பள்ளியின் முதல் வகுப்பு ஏ பிரிவு ஆசிரியை மரியாதைக்குரிய கண்ணாடி டீச்சர். அவரது பெயர் இன்று வரை சரியாக எனக்குத் தெரியாது. எனது சாத்தான்குளம் வீட்டின் பின் பகுதியில் உள்ள வீட்டில் தற்போது குடியிருந்து வருகிறார்கள். ஊருக்கு செல்லும்போதெல்லாம் அவர்களுக்குத் தான் என் முதல் வணக்கம் கிடைக்கிறது.
கண்ணாடி டீச்சர் என் பள்ளிக்கல்வியில் சரியான அஸ்திவாரத்தை அமைத்தவர்.
இரண்டாம் வகுப்பில் சி பிரிவுக்கு சென்ற எனக்கு வகுப்பாசிரியர் ஆக்னஸ் டீச்சர். இவர்களது கண்டிப்பும், கண்ணையும், நாக்கையும் காட்டி மிரட்டும் பாங்கும் இவர்கள் மேல் பயத்தை வரவழைத்தாலும் பாசமானவர்.
3ம் வகுப்பு அ பிரிவில் எனது வகுப்பாசிரியர் திரு பத்மநாபன் சார். முந்திரி பருப்புகளை சாப்பிடுவதில் மிகுந்த விருப்பமுடையவர். சரியாக படிக்காத மாணவர்களின் விரலில் இவர் காட்டு வித்தை அவர்களையும் படிக்க வைத்து விடும்.
4ம் வகுப்பில் பி பிரிவில் சென்ற எனக்கு வகுப்பாசிரியராக இந்தவர் பங்கரா சார். இன்னும் மார்க்கண்டேயன் போல் காட்சிதரும் இவர் எளிய நடையில் பாடம் நடத்துபவர்.
5-ம்வகுப்பு அ பிரிவில் தலைமையாசிரியர் திரு ஜோசப் சார் தான் வகுப்பாசிரியர். கண்டிப்பான நல்லவர்.
உயர்நிலைப்பள்ளிக்கான படிப்பும் அதே தூய இருதய உயர்நிலைப்பள்ளியில் தொடங்கியது. 6ம் வகுப்பு முதல் அ பிரிவிலேயே எனது படிப்பு தொடங்கியது.
அருகே உள்ள தைலாபுரத்தைச் சேர்ந்த ஜெய்ரூஸ் டீச்சர் தான் எனது வகுப்பாசிரியை. சில ஆண்டுகள் கழித்து இவர் மாற்றல் வாங்கி அவர் பகுதி அருகே சென்று விட்டார்.
7ம் வகுப்பில் தான் என் ஆசானாக இருந்தவர் மரியாதைக்குரிய மகா.பால்துரை ஆசிரியர் அவர்கள். இன்றளவும் அவர்மீதான் மரியாதை தொடர்புகள் நீண்டு கொண்டே இருக்கின்றன. எனது தந்தையாரை அண்ணன் என்று உரிமையோடு அழைக்கும் பாசக்காரரான இவரை எனது குருநாதர் அந்தஸ்தில் வைத்திருக்கிறேன்.
8ம் வகுப்பில் திரு ஐசக் ஆசிரியர் தான் வகுப்பாசிரியர். இவரது கைவண்ணத்தால்தான் எனக்குள் ஒளிந்திருந்த நடிப்புத் திறமை வெளிப்பட்டது.
9ம் வகுப்பில் வகுப்பாசிரியையாக இருந்தவர் திருமதி மங்கையர்கரசி ஆசிரியை அவர்கள். எனது இல்லத்தின் வழியாக வருபவராகையால் எனது படிப்பு தொடர்பாக எனது தாயார் இவரிடம் கேட்டு தெரிந்து வீட்டில் பூஜைகள் பெற்றிருக்கிறேன்.
பத்தாம் வகுப்பில் திரு சொர்ணம் அவர்கள் தான் வகுப்பாசிரியர். கணிதத்தை இவரைப் போல் எளிமையாக யாராலும் நடத்த முடியாது. அதனால் தான் பத்தாம்வகுப்பு தேர்வில் கணிதத்தில் 97 மதிப்பெண் பெறமுடிந்தது.
இதை ஒரு பெருமையாகக் கருதித்தான் பிளஸ் 1ல் கணிதப் பிரிவை எடுத்தேன். அங்கும் திரு சொர்ணம் அவர்கள் தான் கணித ஆசிரியர். ஆனாலும் என் மண்டையில்தான் கணக்கு ஏறவில்லை. விளைபு பொதுப் பரீட்சையில் மட்டும் தக்கிமுக்கி 200க்கு 95 மதிப்பெண் எடுத்து பாஸாகி விட்டேன். வகுப்பாசிரியர் யார் என்பது சரியாக நினைவில் இல்லை.
பிளஸ் 2 வில் வகுப்பாசிரியர் திரு ரெஜிஸ்மேரி. ஆங்கில ஆசிரியையான இவர் பள்ளிக் கலை நிகழ்ச்சிகளில் நடனத்துக்கு மாணவர்களை தயார் செய்வார். இவரது நடனக்குழுவில் கண்டிப்பான நானும் இடம்பெறுவேன்.
இவர்கள் தவிர ராஜம் ஆசிரியை, சின்ன ஜேம்ஸ் சார், வேப்பங்காடு சார். (பெயர் மறந்துவிட்டது), பாப்பு டீச்சர், சிலுவை ஆசிரியர், பிரேமா டீச்சர், ஞானபுஷ்பம் ஆசிரியை, இயற்பியல் சீலி டீச்சர், வேதியியல் மகேஷ்வரி டீச்சர், வரலாறு சந்திரா டீச்சர், மற்றுமொறு சந்திரா டீச்சர், தமிழ் ஆசான் திரு ஆறுமுகம் ஆசிரியர், விலங்கியல் தேவராஜ் ஆசிரியர், தாவரவியல் ஹென்றி ஆசிரியர், உடற்கல்வி ஆசிரியர் தேவகரம், ஆகியோர்களும் மனக்கண்முன் வந்து போனவர்கள்.
இவர்களைத் தவிர திரு பள்ளி ஊழியர் விஸ்வநாதன் அவர்களோடு இன்னும் சந்திப்பில் இருந்து கொண்டிருக்கிறேன்.
95ம் ஆண்டு பள்ளிப்படிப்பை முடித்து விட்டு சாத்தான்குளத்தத விட்டும் வெளியேறினேன். இன்று சென்னையில் வேலை செய்தபடி வாழ்க்கை ஓடுகிறது. வளத்தை தேடிக் கொண்டிருக்கிறேன்.
நினைவுகளுடன்
மு.செய்யது முகம்மது ஆஸாத்.