சனி, நவம்பர் 14, 2009

பி.எஸ்.என்.எல். கவனிக்குமா?

சென்னை தொலைபேசியின் (பி.எஸ்.என்.எல். சென்னை)இணைய வசதி வேண்டுமா --- இந்த எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பினால் மட்டும் போதும். எங்களது ஆட்கள் உங்களைத் தேடிவந்து இணைய வசதி செய்து கொடுப்பார்கள்.
------------- பி.எஸ்.என்.எல். தொலைபேசியிலிருந்து அடிக்கடி வந்து விழும் குறுஞ்செய்தி இது. மறைமுகக் கட்டணங்கள் எதுவும் இல்லாமல் சேவை செய்யும் பி.எஸ்.என்.எல்.லுக்கு சல்யூட் வைக்கும் அதே நேரத்தில் அவர்களது பழுதுநீக்கும் சேவை என்பதோ, வாடிக்கையாளர் சேவை மையத்தின் சேவை என்பதோ மிகவும் தாமதமாகவே நிகழ்ந்து வருகிறது.
எனது இல்லம் இருக்கும் நீலாங்கரை பாரதியார் நகரில் தொலைத்தொடர்பு மற்றும் இணைய சேவை என்பது சுமாராகத்தான் உள்ளது. சுமார் ஐம்பது இணைப்புகள் இருக்கும் எமது பகுதியில் அந்த இணைப்புகளின் வயர் மழையில் நனைந்து, வெயிலில் காய்ந்து துருபிடித்து உள்ளது. இரைச்சல் இல்லாமல் பேச்சு என்பது சாத்தியமில்லை.
இணையத்தின் இணைப்பும் சரிவர இல்லை. இரைச்சல் இருப்பதால் மோடம் ஆன் செய்யப்பட்டும், டி.எஸ்.எல். மற்றும் இண்டர் நெட் விளக்குகள் பளிச்சிடுவதற்கு நேரமாகி விடுகிறது.
அப்படியே இணைப்புக் கிடைத்தாலும் யாருடனாவது ஆன்லைனில் பேசிக் கொண்டிருக்கும்போதோ அல்லது மெயில்கள் அனுப்பிக் கொண்டிருக்கும்போதோ இணைப்பு துண்டிக்கப்பட்டு விடுகிறது. மீண்டும் இணைப்பு ஏற்படுவதற்குள் நமக்கு வெறுப்பு வந்து கணினியை நிறுத்திவிட்டுப் போக வேண்டியதாகி விடுகிறது.
என்னைப் போல் குறிப்பிட்ட அளவுக்கான சேவையை மட்டும் பயன்படுத்தும் நபர்கள் இதனால் ரொம்பவும் கஷ்டப்பட வேண்டியுள்ளது.
அன்றொரு மழைநாள் இரவில் அவசரமாக அலுவலகத்துக்கு செய்தி அனுப்ப வேண்டியிருந்தது. கணினியை இயக்கி இணைய இணைப்பை ஏற்படுத்தினால் சுத்தம்........... எப்படியோ டி.எஸ்.எல். விளக்கு மட்டும் ஒளிர்ந்தது. இண்டர் நெட் விளக்கு எரியவில்லை. 1500க்கு போன் போட்டேன். உங்களுக்கு உதவ எங்கள் ஆபரேட்டர் இருக்கிறார்............. உங்கள் அழைப்பு எங்களுக்கு முக்கியமானது............. இதே வரிகள் திரும்ப திரும்ப வந்து கொண்டிருந்தது. நானும் சுமாரர் இருபத்தேழு நிமிடங்கள் ரிசீவரை கீழே வைக்காமல் கேட்டுக் கொண்டிருந்தேன்.
வாடிக்கையாளர் சேவைமையத்தால் நொந்துபோனேன். எனக்குத் தெரிந்த ஒரு பி.எஸ்.என்.எல். அதிகாரிக்கு போன் செய்து அவசரத்தைச் சொன்னேன். அவர் தனக்கு தெரிந்த வரிடம் பேசச் சொல்ல, அவரது வழிகாட்டுதல் படி சில விஷயங்களைச் செய்து எப்படியோ இணையத் தொடர்பை ஏற்படுத்தி செய்தியை அனுப்பிவிட்டேன்.
தெரிந்தவர் இருக்கப்போய் முடிந்தது... இல்லாவிட்டால் அதற்கு புகார் செய்ய வேண்டும். புகார் வந்து பார்க்க வருவதற்குள் இரண்டு நாட்கள் ஆகிவிடும். புகார் சரிசெய்ய வந்தவருக்கு குறைந்தது ஐம்பது ரூபாயாவத் கொடுக்க வேண்டும்...................
கொடுக்கப்பட்ட இணைப்புகளை நல்லமுறையில் பராமரியுங்கள். நாங்களே புதிய வாடிக்கையாளர்களை சேர்த்துவிடுவோம்.
செய்வார்களா பார்ப்போம். கேபிள் இணைப்பின் படத்தையும் பிறகு பதிவேற்றுகிறேன்.

புதன், அக்டோபர் 07, 2009

என் மகள்


‘‘அம்மா என்னோட மேத்ஸ் புக்க எங்கன்னு தெரியலம்மா... ஸ்கூலுக்கு நேரமாயிட்டு இருக்கும்மா... வந்து கொஞ்சம் எடுத்துத்தாம்மா...’’ பள்ளியூனிபார்மை இன் செய்தபடியே வாயில் கவ்விய டையுடன் திங்கட்கிழமைக்கான பரபரப்பில் முக்கல் முனகலாக வார்த்தை வெளியே வந்தன பிரியாவிடமிருந்து.
பிரியா சாந்தியின் ஒரே மகள். செல்லத்துக்கு செல்லம், கண்டிப்புக்கு கண்டிப்பு என வளர்க்கப்பட்டவள். ஹோலி ஏஞ்சல்ஸ் பள்ளியில் 8ம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறாள். பள்ளியில் நடைபெறும் அனைத்துப் போட்டிகளிலும் பங்கேற்று வெற்றிக்கோப்பையை தன் தாய்க்கு பரிசளித்து மகிழ்பவள். ஸ்கூல் யூனிபார்மில் பார்த்தால் ஆரம்ப கால த்ரிஷாவை நினைவு படுத்துவாள்.
‘‘ஏம்மா நேத்து ஹோம் ஒர்க் செஞ்சுட்டு அப்படியே தூங்கிட்ட. அந்த புக்க எடுத்து உன்னோட கப்போர்ட்லதாம்மா வச்சேன். பார்த்து எடுத்துக்க...’’ சமையலறையில் மதிய உணவை டிபன் பாக்ஸில் வைத்தபடியே சத்தம் கொடுத்தாள் சாந்தி.
கப்போர்ட்... அம்மாவின் வாய் மொழிந்த வார்த்தை பிரியாவை சில நொடிகள் உறைய வைத்தது. அம்மா கப்போர்ட்ல புக்ஸ வச்சுட்டு மட்டும் வந்தாங்களா, இல்லை அந்த போட்டோவையும் பார்த்து விட்டார்களா? அப்படி பார்த்திருந்தால் அம்மா ஏதாவது கேட்டிருப்பார்களே. குழப்பத்தோடு கப்போர்ட்டுக்கு வந்தவள் மேத்ஸ் புக் அங்கே இருந்ததை எடுத்துவிட்டு, கலக்கத்துடன் பள்ளிக்கு கிளம்பினாள்.
பிரியா பள்ளிக்கு போனதும், அம்மாவும் தன் நிறுவனத்துக்கு வேலைக்கு கிளம்பிவிட்டாள்.
கதவைப் பூட்டி சாவியை தன் கைப்பையில் வைத்தவள் தெருமுனையில் நின்றிருந்த, வழக்கமாக அலுவலகத்துக் சென்று வரும் மாதாந்திர வாடகை வேனில் ஏறிக்கொண்டாள்.
ஏற்கனவே வண்டிக்குள் இருந்த அவளது நிறுவனப் பெண்கள் வாசித்துக் கொண்டிருந்த கந்தர்சஷ்டி கவசத்துக்குள் தன்னை இனணத்தபடி வாய் முணுமுணுத்தாலும், பிரியாவின் கப்போர்டில் தான் பார்த்த போட்டோ அவள் மனசுக்குள் சுழன்றடித்தது. எதையும் தெளிவாகப் பேசும் பிரியா ஏன் போட்டோவை மறைத்து வைக்க வேண்டும்...

கந்தர்சஷ்டி கவசம் முடியவும், நிறுவனத்தை வேன் அடையவும் சரியாக இருந்தது.
புஷ்பா... பணியிடத்தில் மட்டும் இல்லாமல், வேனிலும் சாந்தியின் அருகில் அமர்ந்து வருபவள்.
‘‘சாந்தி, தேவையில்லாத கதைகளைப் பேச வேண்டாம், ஒருத்தரைப் பத்தி ஒருத்தர் குறை சொல்ல வேண்டாம்னுதான், நாம் வேனில் கந்தர்சஷ்டி கவசம் பாடி வருகிறோம். வழக்கமா சுருதி கூடியிருக்கும் உன் குரலில் இன்னைக்கு ஏன் சுரத்தே இல்லாமல் இருந்தது_’’ & பதில் தேடி கேள்வியை வீசினாள் புஷ்பா.
மவுனம் மட்டுமே சாந்தியின் பதிலாக இருந்தது.
அது ஒரு தனியார் ஆடை ஏற்றுமதி நிறுவனம். சாதாரண டெயிலராகப் பணிக்கு சேர்ந்த சாந்தி தன் கடமை உணர்ச்சியாலும், தன்னுடைய செயல்திறனாலும் இன்று அந்த நிறுவனத்தின் ஆர்டர் டேக்கராக பணி செய்து வந்தாள். வெளிநாடுகளில் உள்ள நிறுவனங்களை இணையத்தின் வழியே தொடர்பு கொண்டு ஆர்டர் எடுப்பது, அரசு மருத்துவமனைகள், சீருடைப் பணியாளர்களுக்கான சீருடைகள் தைத்துக் கொடுப்பதற்கான ஆர்டர் என சகல ஆர்டர்களையும் நிறுவனத்துக்கு பெற்றுக் கொடுத்து, அந்த நிறுவனம் நல்ல வளர்ச்சி பெற்றதில் தன் பங்கையும் கலந்தே வைத்திருந்தால்.
வேலைக்கு வந்ததிலிருந்தே போட்டோ தடுமாற்றம் அவளுக்குள் குடிகொண்டே இருந்தது. யாரைப் பார்க்கக் கூடாது என்று வைராக்கியம் காட்டி வந்தோமோ அந்தாளுடைய போட்டோ. நினைவுகள் பின்னோக்கிச் சென்றது.
மேல்மருவத்தூர்...
பஸ் ஸ்டாண்ட் பக்கம் இருந்த அந்த நிறுவனத்துக்குள் நுழைந்தாள். ‘‘மேடம், டெய்லர் வேலைக்கு ஆள் தேவைன்னு சொன்னாங்க. எனக்கு டெய்லரிங் வேலை தெரியும். இங்க வேலை கிடைக்குமா?’’ & இந்தாங்க டெய்லரிங் படிச்ச சர்டிபிஃகேட்.
வாங்கிப் பார்த்த அந்த மேடம் சாந்திக்கு வேலை போட்டுக் கொடுத்தாள். உற்சாகமாக அந்த எக்ஸ்போர்ட் நிறுவனத்துக்குள் நுழைந்தவளிடம்,
‘உம் பேரு என்ன?’ கட்டிங் மாஸ்டர் சேகரின் கரகரகுரலில் வந்த கேள்வி சாந்தியை எச்சில் விழுங்கியபடியே பதில் சொல்ல வைத்தது.
‘‘போய் அந்த மெஷின்ல உக்காரு.’’ கை காட்டிய இடத்தில் காலியாக இருந்த இருக்கையில் அமர்ந்தாள் சாந்தி. அவள் மிதித்து பழகிய சாதாரண மெஷின் இல்லை அது. மின்சாரத்தால் இயங்கும் அந்த மெஷினின் வேகமும் அதிகம்.
தனக்கு வந்த கட்டிங்கை சிரமத்துடன் தைத்துக் கொடுத்தாள்.
‘‘முதல் நாள் அப்படித்தான் இருக்கும். பழகப் பழக சரியாகிடும்’’ & கரகர குரலில் இருந்தே வந்தது ஆறுதல்.
சில நாட்களில் சாந்தியின் கைக்கும், காலுக்கும் தையல் மெஷின் எளிதாகப் பழகியது. சேகரும் கூடத்தான்.
சாந்தி, உன்னை கல்யாணம் செஞ்சுக்க ஆசைப்படுறேன். படீரென சேகர் கேட்க, முதலில் தடுமாறினாலும், பெற்றோரிடம் கேட்கச் சொன்னாள்.
சுபயோக சுபதினத்தில் திருமணம் நிறைவேறியது.
கால ஓட்டம் சாந்தியை ஒரு பெண் குழந்தைக்கு தாயாக்கியது. சேகருக்கு சாந்தி மீதான நாட்டத்தைச் சலிக்கச் செய்துவிட்டது.
‘‘நல்லாத்தானே இருந்தீங்க. ஏன் இப்படி மாறுனீங்க. அந்தப் பொண்ணுகூட ரொம்ப ஓவராப் பழகுறீங்க. இது நல்லாயில்லை... உங்களுக்குன்னு நான் இருக்கேன். குடும்பத்துக்காரங்களுக்கு தெரிஞ்சா அசிங்கமாப் பேசுவாங்க’’ & தவித்தாள் சாந்தி.
‘‘உன் அறிவுரையை நிப்பாட்டு. அவகூட பழகுறது உனக்குப் பிடிக்காட்டி நீ வேலைக்கு வராதே. எனக்கு அவதான் வேணும். இஷ்டம் இருந்தா சகிச்சுக்க... இல்லாட்டி போடி வெளியே’’ & பாரின் சரக்கின் நெடி சேகரின் குரலிலிருந்து பரவியது.

சேகர் & சாந்தி குடும்ப கசமுசா தையல் எந்திரத்தை விட வேகமாக ஓடியது நிறுவனத்தில். போதையின் உச்சத்தில் அரை நாள் விடுப்பு எடுத்துக் கொண்டு அந்தப் பெண்ணை வீட்டுக்கே அழைத்து வந்து சல்லாபித்துக் கொண்டிருந்தான் சேகர். எதேச்சையாக பெர்மிஷன் வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வந்த சாந்தி வீட்டில் நடந்து கொண்டிருந்த அநாச்சாரத்தைப் பார்த்துப் பதறிப் போனாள்.
‘‘கட்டுனவளுக்கு மட்டும் புருஷனா வாழத்தெரியாத நீயெல்லாம் ஒரு மனுஷன். மனசோடு ஒத்து வாழ்றதுதான் மாங்கல்யம். இப்படி சதைக்கு அலைஞ்சி..... தூ..... இப்படி ஒரு புருஷனும் எனக்கு வேண்டாம், தன் அப்பா ஒரு பெண் சபலிஷ்ட்டுன்னு என் பொண்ணுக்கும் தெரிய வேண்டாம்.’’
ஆவேசம் வந்தவள் போல் பேசியவள், 5ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த தன் மகளைத் தூக்கிக் கொண்டு வெளியேறினாள்.
மனதில் ஏறிய வெறி அவளைத் தன் உறவுகளின் கண்களுக்கு அப்பால் செல்லச் செய்தது. பள்ளித்தோழி நினைவுக்கு வர சென்னைக்கு வந்தாள். இங்கும் ஒரு எக்ஸ்போர்ட் நிறுவனம் அவளுக்குக் கை கொடுத்தது.
தந்தையின் சில அக்கிரமங்களை தெரிந்து வைத்திருந்த கவிதாவிடம், சாந்தி சொல்லிச் சொல்லி வளர்த்தாள். எந்த ஆணையும் நம்பி விடாதே, நல்லா படி, நல்லபடியாக முன்னேறு. என் வாழ்க்கையின் ஒரே பிடிப்பு நீ மட்டும்தான். உனக்காகத்தான் இந்த வாழ்க்கை வண்டியை ஓட்டிக் கொண்டிருக்கிறேன்.
தாய் சொல்லச் சொல்ல, மனதில் ஏற்றுக் கொண்ட பிரியா தந்தையின் நினைவுகளை வெறுத்து படித்து வந்தாள்.... இன்றைக்கு அதே பிரியாவின் கப்போர்டில் சேகரின் போட்டோ... மெலிந்த தேகத்துடன், தாடியுடன் இருந்தது அந்த சேகரின் உருவம். எப்படி வந்தது இவளிடம்.....

மனக்குழப்பம் தலைவலியாக, மத்தியானம் அரைநேரம் விடுப்பு போட்டுவிட்டு சீக்கிரமாகவே வீடு திரும்பியிருந்தாள் சாந்தி.

பள்ளி முடிந்து திரும்பிய பிரியா , வீட்டுக்கதவு ஏற்கனவே திறந்திருப்பது அறிந்து மெதுவாக உள்ளே நுழைந்தாள்.
விசும்பிய கண்களுடன் அம்மா இருப்பதை கண்டு அவள் அருகே மெதுவாக அமர்ந்தாள்.
‘‘அம்மா என்னை மன்னிச்சுடும்மா. அந்த போட்டோவை உங்ககிட்ட சொல்லாம வச்சிருந்தது தப்புத்தான்.
முந்தாநாள் பள்ளிக்கூடத்திலிருந்து ‘ஆதரவற்றோர் இல்லத்துக்கு” கூப்பிட்டுப் போனாங்க. அங்க ஆதரவற்ற நிலையில் நோய்நொடியில் அப்பா இருக்கிறதப்பார்த்தேன். ஆனா அவருக்கு நான் யாருன்னு தெரியலம்மா.
அவரு உங்களுக்குப் பண்ணுன கொடுமைகளை கூட இருந்த பார்த்ததாலே அந்த ஆளுமேல எனக்கு பரிதாபமே வரலம்மா. இன்னும் வைராக்கியம்தாம்மா அதிகமாச்சு.
இந்த வைராக்கியம் குறையக்கூடாதுன்னுதான் அவர் போட்டோவ என் கப்போர்ட்ல வச்சேன். தினம்தினம் அந்தப் போட்டோவ பார்க்கும்போது எனக்கு இன்னும் சாதிக்கணும்னு வேகம் வரும்மா. அதான் வச்சேன் என்னத் தப்பா நெனச்சுக்காதீங்கம்மா.’’

மகளின் பதில் கொடுத்த சந்தோஷம் சாந்திக்குள் இன்னும் தன்னம்பிக்கையை அதிகரித்தது.

திங்கள், செப்டம்பர் 28, 2009

என்று காண்போம் தமிழ் தீபஒளி!

அது ஒரு சர்வாதிகாரியின் ஆட்சி நடந்த நாடு ன்னுல்லாம் சொல்ல முடியாது. ஏன்னா அது ஒரு கிராமம். அங்க நெடுஞ்சாண் உயரமும், அகலமான தொப்பையும் கொண்ட ஒரு கிறுக்குப் பய நாட்டாமையா இருந்தான். பயதான் கிறுக்கே தவிர சொத்துபத்தெல்லாம் சாஸ்தி. அதனாலதாண்டா அவன் நாட்டாமை ஆக்குனாங்கன்னு நீங்க சொல்றது கேக்குது.
அந்த நாட்டாமை கிறுக்கனுக்கு ஒரு பழக்கம். தன் சொல்றபடிதான் ஊரே நடக்கணும், நான் கால சரிச்சு வச்சி நடந்தா, மத்தவனும் அப்படியேத்தான் நடக்கனும், நான் ஒரு கால தூக்கி வச்சிட்டு உச்சா போனா மத்தவனும் அப்படித்தான் போவனும்னு ஒரு சட்டம் வச்சிருந்தான். ஆனா இந்த சட்டத்துல ஒரு தள்ளுபடி என்னன்னா, நாட்டாமை குடும்பத்துக்காரங்களும், அவனுக்கு வேண்டப்பட்டவங்களும் இத கடைப்பிடிக்கனும்னு அவசியம் இல்லை. அதை நாட்டாமையும் கண்டுக்க மாட்டான்.
இந்த நாட்டாமைக்கு ஒரு பழக்கம் இருந்துச்சு. என்னன்னா, அந்த கிராமத்துல பொதுக்கிணத்து தண்ணியத்தான் அங்குள்ள மக்கள் எடுத்து வந்து குடிப்பாங்க. அவங்க கப்பி போட்டு வாளிய வச்சு தண்ணிய எறச்சி குடத்துல ஊத்தி தண்ணியக் கொண்டுபோவாங்க.
இந்த நாட்டாமை, காலைல வேப்பங்குச்சி வச்சிட்டு பல்துலக்கிட்டு வர்றவரு, சரியா தண்ணி எடுத்து வச்சிருக்கிர குடத்துக்குல்ல துப்பிட்டு போயிடுவாரு. எல்லாமக்களும் திட்டுனாலும், கண்டுக்காம சிரிச்சிக்கிட்டே போயிடும் அந்த கிறுக்கு.
இந்த கிறுக்குப்பய படுத்துற பாட்டுக்கு அவன் போய் சேர்ந்தாத்தான் சரியா இருக்கும்னு ஊரே நேரம் பார்த்துக்கிட்டு இருந்துச்சு.
எவனோ சின்னப்பையன் தின்னுபோட்ட வாழப்பழ தோல்ல நாட்டாமை வழுக்கு கீழே விழ, அந்த ரோடே பள்ளமாயிடுச்சு. அப்புறம் அவன கட்டில்ல கட்டி தூக்கியாந்து வீட்டுல வச்சிட்டாங்க.
ஊர்மக்கள்லாம் நாட்டாமை போயிருவாண்டு சந்தோஷமா இருந்தாங்க. என்னத்தான் கிறுக்கனா, இருந்தாலும் சாவும்போது நாட்டாமைக்கு மனசு மாறிச்சு. தன் மொவன கூப்பிட்டாரு, இதப்பார்றா, இவங்ககிட்ட நான் ரொம்ப கெட்டப்பேரு வாங்கிட்டேன். அதையெல்லாம் நீ தான் மாத்தனும், செஞ்சுருய்யாண்டு சத்தியம் வாங்கிக்கிட்டு டிக்கெட் வாங்கிட்டாரு நாட்டாமை.
வாரிசுப்படி, கிறுக்கு நாட்டாமை மொவன் நாட்டாமை ஆயிட்டான்.
சனங்கள்ளாம், எப்பாடி அப்பன் போயிட்டான். மவன் ரொம்ப நல்லவண்டா, இவன் அந்த கிறுக்குமாதிரி இருக்கமாட்டான்னு சொல்லி ப்பேசிக்கிட்டாங்க.
அடுத்த நாள், அந்த சின்ன நாட்டாமை வேப்பங்குச்சியால பல்துலக்கிட்டே வந்தான். கிணத்துப்பக்கம் வரவும், தண்ணி எடுத்து வச்ச பொம்பளைங்கள்ளாம், கொஞ்சம் கலக்கமாத்தான் இருந்தாங்க. வந்தவன் குடத்த பார்த்துவிட்டு திரும்பிட்டான். நல்லவேளை போயிட்டான்னு பொம்பளைங்க சொல்றதுக்கு முன்னாடியே அப்படியே கிணத்துக்குள்ளே துப்பிட்டான்.
டேய் இதுக்கு அந்த கிறுக்குப்பய நாட்டாமையே மேலடான்னு, தங்கள் விதியை நினைச்சிக்கிட்டு போயிட்டாங்க.......

யூதர்களை அழிப்பது ஒன்றையே நாட்டாமையா நின்று செஞ்சிக்கிட்டு வந்தவர் ஹிட்லர். வரலாற்றில் இன அழிப்பு படுகொலைகாரன்னு முதலிடத்தில் இருந்தவன் ஹிட்லர். ஆனா அவர் ரொம்ப நல்லவர்டா, நான் தாண்டா எல்லாத்துக்கும் மேலன்னு சொல்லிக்கிட்டு கிளம்பியிருக்காரு சிவப்புதுண்டு ராஜபக்சே... லட்சக்கணக்கான தமிழர்களை கொன்னு இன அழிப்பு செஞ்சி ஹிட்லரை விடவும் ஒரு கொடியவன் தான் தான்னு நிருபீச்சிக்கிட்டிருக்காரு.
ஏ! சர்வதேச தமிழ் சமூகமே, இந்த நரகாசுரனை வதம் செய்து என்று கொண்டாடப்போகிறாய் தமிழ் தீபாவளியை!

திங்கள், ஜூன் 15, 2009

பிரபாகரன்


பிரபாகரன் - உலகத் தமிழர்களின் ஒரே உயிரெழுத்து. ஆனால் உயிருடன் இருக்கிறாரா? உலகத் தமிழர்களின் வாதமும் இதுதான்.
இருக்கலாம் என்பதற்காக பல்வேறு இதழ்களின் சான்றுகள்!
* பிரபாகரனின் சடலம் என்று இலங்கை அரசு வெளியிட்ட படங்கள் அவர்தான் என்பதை மெய்ப்பிக்க வில்லை.
ஒருபடத்தில் கண்கள் நிலைகுத்தி நிற்கிறது, மற்றொன்றில் மூடியிருக்கிறது, ஒன்றில் வாய் பிளந்திருக்கிறது, மற்றதில் வாய் மூடியிருக்கிறது. ஒன்று முகத்தில் முன்று நாள் தாடிக்கான நிலை உள்ளது, மற்றதில் முகம் வழுவழுவென்று இருக்கிறது.
உள்ளாடை தொடர்பான படத்திலும் நிற வேறுபாடு காணப்படுகிறது. உருவ அமைப்பில் சற்றேறக்குறைய பிரபாகரனைப் போல் காணப்பட்டாலும் தேக்கட்டுகளில் பிரபாகரனின் தாக்கம் இல்லை.
* கொல்லப்பட்டது குறித்து அரசின் தகவல்களும் முழுமையானதாக, நம்பகத்தன்மை வாய்ந்ததாக இல்லை.
இரண்டு நாள் முன்பே கொல்லப்பட்டதாகவும், கடலுக்குள் தப்பிக்கையில் கொன்றதாகவும் கூறியவர்கள், மறுபடி கூறுகையில் மாற்றிக் கூறியிருக்கிறார்கள்.
* அதிபர் கூட்டிய மந்திரிசபை கூட்டத்தில் பிரபாகரன் கொல்லப்பட்டார் என்பது தொடர்பாக எவ்வித தகவலையும் தெரிவிக்கவில்லை.
*இந்தியாவுக்கு தரப்பட்ட பிரபாகரன் இறப்பு சான்றிதழின் தன்மை குறித்து இந்திய அரசு பத்திரிகைகளுக்கு அதன் நகல் பிரதி எதையும் வெளியிட வில்லை.
* இந்திய அரசால் பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டார் என்று கூறி ராஜீவ்காந்தி கொலைவழக்கு விசாரணையிலிருந்து பிரபாகரன் பெயர் நீக்கப்பட்ட்தாக எந்த அறிவிப்பையும் வெளியிட இயலவில்லை.

இதையும் மீறி பொட்டு அம்மான் போன்ற பாதுகாக்கும் தலைவர்கள் பிரபாகரனை கண்டிப்பாக போருக்கு பலியிட்டிருக்க மாட்டார்கள் என்பது திண்ணம்.
இதனால் புலித்தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்ற நம்பிக்கையை நமக்குள் விதைத்துக் கொள்வோம்.