திங்கள், பிப்ரவரி 15, 2010

எஸ்.ராமகிருஷ்ணனுடன் கலந்துரையாடல்!


எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் கலந்து கொண்ட ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சி நான் பணியாற்றும் விகடன் அலுவலகத்தில் நடந்தேறியது.
விகடன் எம்.டி. பா.சீனிவாசன் நிகழ்ச்சி அறிமுகத்தைத் தொடர்ந்து தனது உரையாடலைத் தொடங்கினார் எஸ்.ராமகிருஷ்ணன்..... அதிலிருந்து சில வரிகள்...

கட்டாயம் என்ற சொல்லை நாம் பயன்படுத்தும் விதம் வேறு. ஆனால் கட்டாயம் என்பதன் அர்த்தம் கட்டு+ ஆயம். கட்டு என்பது நிலத்தையும் ஆயம் என்பது வரியையும் குறித்து நிலவரி என்பதான சொல்லே கட்டாயம். நாம் இன்று அதைப் பயன்படுத்தும் தன்மை வேறு விதமாக இருக்கிறது.

செய்தியாளர் உணர்ச்சியின் அடிப்படையில் செய்திகளை பார்ப்பதை தவிர்த்து உண்மையின் அடிப்படையில் செயல்பட வேண்டும்.

வழக்கமான சொல்லையே பயன்படுத்திக் கொண்டிருக்காமல் புதிய புதிய சொற்களைப் பயன்படுத்த வேண்டும். ஒரே சொல் பல்வேறு இடங்களில் பல்வேறு பொருட்களைக் குறிக்கும் தன்மை தமிழ் மொழியில் மட்டுமே உண்டு...

உறவுகளுக்குள் நம்மை ஊடுருவிப் பார்க்க வேண்டும். நவீனத்துவமாகி வரும் குடும்ப வாழ்க்கையில் எந்திரத்தனமாக இயங்காமல் வாழ்க்கையை கொஞ்சம் சுவாரஸ்யத்துடன் வாழப் பழகிக் கொள்ள வேண்டும்.

புறச்சிந்தனைகளை வளர்க்கும் விதமான கேள்விகளை நமக்குள் எழுப்பி அதற்கான தீர்வைத் தேடும்போது இன்னும் நாம் சுவாரஸ்யமான பாதையில் பயணிக்கலாம். மகாபாரதத்தை படித்தால் பல்வேறு கேள்விகளுக்கான விடைகள் கிடைக்கும்.

அழகான தாஜ்மஹாலைக் கட்டிய ஷாஜஹான் தான் நம்மை ஐநூறு வருடங்கள் ஆங்கிலேயர் அடிமையாக வைத்ததற்கு பிள்ளையார் சுழி. தீயில் கருகிய தன் மகளின் முகத்தை குணப்படுத்திய வெள்ளை டாக்டர் கோரிய வரியில்லா வர்த்ததகத்துக்கு ஷாஜஹான் வழங்கிய அனுமதிதான் பிரிட்டீஸ் அரசு நம்மை ஆண்டது...

உறவுகள் தொடர்பாக ஆறுமுக நாவலரின் கதைகளையும் அவர் சுட்டிக்காட்டிப் பேசியபோது உண்மையிலேயே தந்தையின் அரவணைப்பு என்பது ஆண் குழந்தைகளுக்கே கிடைக்காத ஒரு பொக்கிஷம் என்பது தெரியவந்தது....

புத்தரின் மகன் நகுலன் தவறு செய்துவிட்டான். அந்த தவறை சுட்டிக்காட்ட வேண்டும் என்று விரும்பியவர் தன் அறையில் ஒரு பாத்திரத்தில் சுத்தமான தண்ணீர் வைத்திருந்தார். நகுலன் அங்கே வந்ததும் அந்த பாத்திரத்தில் கையை கழுவச் செய்தார். பின்னர் அந்த தண்ணீரை குடிக்கச் சொன்னார். அழுக்குத் தண்ணீர் என்று நகுலன் சொன்னதும், அந்த தண்ணீரை அழுக்காக மாற்றியது யார் என்று கேள்வி எழுப்பி சிந்திக்கச் செய்ததன் மூலம் அவன் தவறை அவனே உணரச் செய்து திருத்தினார்.

நல்லபல தகவல்களைச் சொன்னவர் கடைசியாக பத்திரிகையாளர்கள் பார்ப்பதற்காக பல ஆங்கிலப் படங்களைச் சுட்டிக்காட்டி சென்றார்................


பெயர் மட்டுமே தெரிந்திருந்த ஒரு எழுத்தாளரை நேரில் சந்தித்து, அவர் கூறியதை சிந்திக்க முடிந்தது.

1 கருத்து:

Joe சொன்னது…

சுவாரஸ்யமான இடுகை.

தமிழ் எழுத்துலக ஜாம்பவானை நேரில் சந்தித்திருக்கிறீர்கள், மகிழ்ச்சியான விஷயம்!