அவன் மெத்தப் படிச்ச கிருக்கன்। அதனால் ஊருக்குள்ள அவனை வச்சுக்க யாருக்கும் இஷ்டமில்ல। எங்கேயாவது போய்த்தொலைனு அனுப்பி வச்சிட்டாங்க।
நம்மாளுக்கு ரொம்ப அவமானமா போயிட்டுது। இந்த ஊருல இருந்து நம்மள தொறத்தி விட்டுட்டாங்க। ஆனா இனிமே நாம போற ஊருலல்லாம் நம்மள எல்லோரும் தேடி வரச்செய்யணும்னு அந்த கிருக்குப் பய மனசுல நெனச்சுக்கிட்டான்।
போற வழியில ஒரு கோயில் இருந்துச்சு। அந்த கோயிலை விட அங்க இருந்த உண்டியல் நம்ம ஆளோட கவனத்தை சீண்டவும் வெடுக்குன்னு உண்டியலை தூக்கிட்டான்। அக்கம் பக்கத்துல நின்னவங்க எல்லாம், திருடன் திருடன்னு கத்திக்கிட்டே தொறத்த ஆரம்பிச்சாங்க। ஊர்க்காரங்களும் சேர்ந்து தொறத்துனாங்க।
எப்படியோ ஊரே நம்மள தேடி ஓடிவர ஆரம்பிச்சுட்டுனு ஒரு சந்தோஷத்துல, கையில் மாட்டுன வரைக்கும் சில்லரையை எடுத்துக்கிட்டு, உண்டியல் தூக்கி ஓரமாப்போட்டுட்டு, சிட்டாப் பறந்துட்டான்। (ஒலிம்பிக்ஸ்ல ஓடியிருந்தானா கண்டிப்பா இந்தியாவுக்கு தங்கம்தான்।)
சரி, உண்டியல் கிடைச்சிடுச்சேன்னு தொறத்துனவங்கள்லாம், திரும்பிப் போயிட்டாங்க।
அந்த ஊரோட எல்லையத் தாண்டி போனவன் கண்ணுல ஒரு கழுதை தட்டுப்பட்டுச்சு। பொதி தூக்கவும் ஆவாதுங்கிற அளவுல வயசான கழுதை।
கழுதைக்கு சொந்தக்காரன் கொஞ்சம் தள்ளி, நின்னு கழுதையப் பார்த்துக்கிட்டிருந்தான்।
நம்ம கிருக்குப்பையன், அவன்கிட்ட போய்ட்டு, ஏ ஐய்யா இந்த கழுதைய, எனக்கு தருவிங்களா?ன்னு கேட்டதும், ஏதாவது கொஞ்சம் பணம் தந்துட்டு கொண்டுபோன்னான்।
கிருக்குப் பையன் அவன்கிட்ட, இப்போதைக்கு பணம் இல்ல, இன்னும் ஒரு மாதம் கழிச்சி உனக்கு கண்டிப்பா ஆயிரம் ரூபாய் தருவேன்। நீ நம்பினால், இப்போது கழுதையை எனக்குத் தான்னான்।
ஒன்னுக்கும் ஒதவாத கழுதைக்கு, ஆயிரம் ரூபாயான்னு சந்தோஷப்பட்ட அந்த கழுதக்காரனும், ஒரு ஒப்பந்தம் போட்டுட்டு எடுத்துட்டுப் போன்னான்।
ஒப்பந்தம் போடப்பட்டது,
ஒப்பந்த சரத்து இதுதான்।
''அதாகப்பட்டது, இன்னாருடைய கழுதைய, இன்னாருக்கு விக்கிறேன்। இன்னாரு, தேதி குறிக்கப்படாத இன்னொரு மாதத்துல ஓராயிரம் ரூபாவக் கொடுக்கனும்। அப்படி பணம் கொடுக்கத் தவறினா, இன்னாருகழுதைய தோள்ல தூக்கிக்கிட்டு, ஒருவாரத்துக்கு ஊர சுத்திவரணும்।"
அதிமேதாவி கழுதக்காரனும், இதுக்கு ஒப்பந்தத்த சந்தோஷமா வாங்கிக்கிட்டு, கழுதையைக் கொடுத்துட்டான்।
கழுதையை வாங்கின கிருக்குப்பையன், அத ஓட்டிக்கிட்டு , பக்கத்து ஊரு சந்தைக்கு வந்தான்।
அங்க , இரண்டு கால் கோழி நாற்பது ரூபா, ஒருகால் கோழி 15ரூபான்னு வித்துக்கிட்டிருந்தவன்கிட்ட போயி, நொண்டிக் கோழி கிடைக்குமான்னு கேட்டான்।
எந்த ஊரு கிருக்கனோன்னு தம் மனசுக்குள்ளார சிரித்தபடி கோழிக்காரன், ஒரு கோழியை எடுத்துக் கொடுத்தான்। அதற்கு ஒத்தக்கால்தான் இருந்தது।
நம்ம கிருக்கன் எடுத்த எடுப்பிலேயே, நொண்டிக்கோழிங்கறதால அஞ்சு ரூபாத் தான் தருவேன்னான்। நொண்டிக்கோழிக்கு அஞ்சு ரூபாயா ன்னு சந்தோஷத்துல, கோழியைக் கொடுத்துட்டான்।
நம்ம கிருக்கன், கழுதைக்கு புல்லுக்கட்டு வாங்கிக்கிட்டு, கோழியையும் எடுத்துக்கிட்டுப் போனான்।
சந்தையை விட்டு ஒதுக்குப் புறமா போனவன், புல்லுக்கட்டுல, உண்டியல் சில்லறையை ஒண்ணு, ஒண்ணா வச்சு கழுதைக்கு கொடுத்தான்। கழுதையும் புல்லுக்கட்டை தின்னு விழுங்கவும், காசும் சேர்ந்து கழுத வயித்துக்குள்ள போயிடுச்சு।
மறுநாள் சந்தை கூடுமிடத்துக்கு கழுதையுடன் வந்த கிருக்கன், கழுதையின் வயிற்றில் லேசாக குத்துவிட்டான்। கழுதை தன் கழிவை வெளியேற்றியது। அப்ப சில்லறையும் ஒன்னொன்னா வெளியே வந்து விழுந்தது।
ஒப்பந்தம் எழுதிக்கொடுத்தானே அந்த கழுதைக்காரனும் சந்தைக்கு வந்தான்। என்னடா இது, நம்ம கழுதை காசா விட்டைப்போடுதேன்னுட்டு, கிருக்கண்ட்ட போயி, ஒப்பந்தத்தை முறிச்சிக்கலாம்। நான் உனக்கு ஆயிரம் ரூபா கொடுக்கிறேன்। கழுதைய என்கிட்டயே கொடுன்னான்।
கிருக்க்ன், கொஞ்சம் பிகு பண்ணிட்டு, ரூபாயை வாங்கிட்டு, சரி இந்தாக் கொண்டு போன்னான்।
அப்ப நொண்டிக் கோழி கத்தியது। உடனே, கிருக்கன், ரூபாயை திருப்பிக் கொடுத்து, கழுதையை தந்துருன்னான்।
கழுதைக்காரன் ஏன்னான்। நாளைக்கு கழுதை தங்கக்காசு போடப்போவுதுன்னு, கோழி சொல்லுதுன்னான்।
கழுதைக்காரனுக்கு ஆசை தாங்கலை, எப்பெல்லாம், கழுதை தங்கக்காசு போடும்னான்। இந்தக் கோழி எப்பெல்லாம் கத்துதோ அப்பெல்லாம் தங்கக்காசு போடும்னான்।
எனக்கு இந்தக் கோழியையும் கொடுத்துருன்னான்। நான் கோழியையும் தரமாட்டேன், கழுதையையும் தரமாட்டேன்னு கிருக்கன் சொன்னான்।
கடைசியில கழுதைக்காரன், தலா ஆயிரம் ரூபான்னு கொடுத்து இரண்டையு ம் கூட்டிட்டுப் போனான்।
அப்ப, கிருக்கன் சொன்னான், கழுதை காசு தரலான்னா, அடிவயித்துல உலக்கையால ஓங்கிப் போடுன்னான்।
மறுநாள் விடிகாலை நொண்டிக் கோழி கூவியது। கழுதைக்காரன் சந்தோஷமா, கழுதைக்கிட்டப் போனான்।
கழுதை காசு போடல। உலக்கையை தூக்கிட்டு வந்து அடிவயித்துல ஓங்கிப் போட்டான்। கழுதை உலகத்தை விட்டேப் போயிட்டு।
ஆனாலும், கோழி கத்திக் கொண்டே இருந்ததால், கழுதைக்காரன் கோழியையும் கழுத்தை திருவிக் கொன்றான்।
அப்பத்தான் அந்த அதிமேதாவிக்கு, தான் ஏமாந்தது உணர்ந்தது। தன் சகாக்களை கூட்டிக் கொண்டு, கிருக்கனைத் துரத்த, கிருக்கன் பணத்துடன் அடுத்த இலக்குக்கு ஓடினான்।
ஓடிஓடி களைத்தவன், ஒரு ஆற்றங்கரையில் வந்து படுத்துக் கொண்டான்। அந்தப் பக்கமாக ஒரு சலவைத் தொழிலாளி, தன் மனைவி மற்றும் குழந்தைகளுடன் வந்தான்।
கிருக்கனைப் பார்த்ததும், பரிதாபப் பட்ட அவன், கிருக்கனை தன்னுடன் அழைத்துக் கொண்டு தன் கிராமத்துக்கு சென்றான்।
உம் பேரென்ன? என்று சலவைத் தொழிலாளி கேட்டதற்கு, 'வந்தான்" என்றவன், சலவைத் தொழிலாளி மனைவியிடம் 'போனான்" என்றும், ஒரு குழந்தையிடம் 'கடலை", மற்றொரு குழந்தையிடம் 'முறுக்கு" என்றும் கூறினான்।
மறுநாள் துறைக்குச் சென்ற சலவைத் தொழிலாளி விலையுயர்ந்து பட்டுப்புடவைகளை கிருக்கனிடம், காயப் போடுவதற்காகக் கொடுக்க, அங்கிருந்து புடவை நீட்டீனான் கிருக்கன்।
நீண்ட நேரமாகியும், கிருக்கனை தேட ஆரம்பித்த சலவைத் தொழிலாளி, தன் குடும்பத்துடன் அவனை தேடி அலைந்தான்। ஒவ்வொருவரும் ஒவ்வொரு திக்கில் தேடினார்கள்।
சலவைத் தொழிலாளி, ஏய் வந்தான் என்று கத்த, மனைவியும் பிள்ளைகளும் எங்க வந்தான் என்று கேட்டு வர தேடச் சொல்லி சப்தம் போட்டான் தொழிலாளி,
ஏய் போனான் என்ற மனைவியின் குரல் கேட்டு அங்கும் போய் தொழிலாளி ஏமாற், அந்நேரத்தில் குழந்தைகள், ஏய் கடலை, ஏய் முறுக்கு என்று கத்தவும், நானே இங்க புடவையைக் காணோம்னு தேடிக்கிட்டிருக்கேன்। உங்களுக்கு கடலையும், முருக்கும் வேணுமா என்று பிள்ளைகளை அடிக்க ஆரம்பித்தான் சலவைத் தொழிலாளி।
புடவையுடன் வந்த கிருக்கன், நடுக்காட்டிலிருந்த ஒரு புளியமரத்தில் புடவைகளை உச்சிக் கொம்பில் தொங்க விட்டான்। அந்தப் பக்கமாக வண்டியில் வந்த ஒரு பேராசைக்கார வியாபாரி, கிருக்கனிடம் என்னப்பா, இந்தப் புளியமரத்தில் புடவை காய்க்கிற்தா என்று கேட்டது, கிருக்கன் ஆமாம் ஐயா, இந்த மரத்தில் தினசரி இதுபோன்று பட்டுபுடவை காய்க்கும், இன்னைக் இவ்வளவு காய்ச்சிருக்கு, இதை பறிக்கத்தான் வந்தேன் என்றான்।
என்னப்பா சொல்ற, இது உன் மரமா, தினமும் புடவை காய்க்குமா என்று கேட்டான்।
கிருக்கன் பதில் ஏதும் சொல்லாமல், மேலே எறி புடவைகளை எடுக்க ஆரம்பித்தான்।
புடவையுடன் கீழே இறங்கி வந்தவனிடம், மரத்தை தான் விலைக்கு வாங்குவதாக் கூற, பெருந்தொகையை வாங்கினான் கிருக்கன்।
பின்னர் அங்கிருந்து கிளம்பும்போது, இந்த மரம் புட்வையைக் காய்க்காவிட்டால், மரத்தின் அடியில் தோண்டி, அண்டா நிறைய வென்னீரை ஊற்றுங்கள் என்று கூறிவிட்டு சென்றான்।
பேராசைக்கார வியாபாரி, மறுநாள் மரத்தில் புடவை இல்லாததால், அண்டா வென்னீரை வேரில் ஊற்ற மரம் விரைவில் பட்டுப் போனது।
ஊர் ஊராய் சம்பாதித்த? பணத்தைக் கொண்டு, உள்ளூருக்கு திரும்பிய கிருக்கனின் வசதியைப் பார்த்த அன்று துரத்தியவர்கள் இன்று ஆரத்தி எடுத்து தங்களுடன் சேர்த்துக் கொண்டனர்।
அங்கே தனது வேலையைக் காட்டிய கிருக்கன் ஊர்த்தலைவனான்। அப்புறம் என்ன எந்த ஊருக்கும் போய் வித்தைக் காட்டாமல் சொந்தஊரிலேயே சுகமாக சுரண்ட ஆரம்பித்தான்।
இப்பத் தெரிஞ்சிருக்குமே யார் கிருக்கன்னு?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக