சொர்க்கத்து சுனைநீர்
அவர் ஒரு மிகப்பெரிய அறிஞர். பெயர் ஆகா அகில். அன்றைய தினம் அவர் வீதி வழியாக நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது மேகம் திரண்டு மழை பெய்யத் தொடங்கியது. ஆகா அகில், மழை நீரிலிருந்து தன்னை காத்துக்கொள்ள ஒதுங்கிமிடம் தேடி ஓடிக் கொண்டிருந்தார்.
ஆகா அகில்... ஆகா அகில்...
குரல் வந்த திசையை நோக்கினார், அதுமுல்லாவின் வீடு.
வீட்டு திண்ணையில் ஒதுங்கிய ஆகா அகிலிடம் , முல்லா முகமன் கூறினார்.
பதில் வணக்கம் கூறியபடியே, தன் ஆடையிலிருந்த மழை நீர்த் துளிகளை உதறிக் கொண்டிருந்தார்.
என்ன இப்படி செய்து விட்டீர்களே ஆகா அகில்?
முல்லாவின் கேள்வியை அறிஞரை திகைக்க வைத்தது. ஏன் என்பது போல் பார்த்தார்.
அறிஞரே, மழை என்பது சொர்க்கத்து சுனை நீர். அதை பருக முனைய வேண்டுமே தவிர ஓடி ஒதுங்கக் கூடாது என்று ஒரு குட்டி பிரசங்கம் செய்து விட்டார் முல்லா.
தான் ஏதோ தவறு செய்துவிட்டது போன்றும், முல்லா அதிலிருந்து தன்னை காப்பாற்றி விட்டதாகவும் எண்ணிய ஆகா அகில், முல்லாவுக்கு நன்றி கூறியபடியே, சொர்க்கத்து சுனைநீரை ஆசை தீர பருகியபடியே மழையில் நனைந்த படி சென்றார்.
காய்ச்சல் , ஆகா அகிலை காய்ச்சி எடுத்துவிட்டது. குடும்பத்தினர் திட்டினார்கள். முல்லாதான் ஏதோ சொன்னார் என்றால் நீரும் அதை பெரிதாக எடுத்துக் கொண்டீரே, இப்போது பாரும் யார் அவஸ்தை படுகிறார்கள் என்று...
சில நாட்களில் மீண்டும் உடல்நிலை தேறியது ஆகா அகிலுக்கு. வழக்கமான பணிகளில் ஈடுபட்டார்.
ஒரு நாள் தன் வீட்டுக்குள் அமர்ந்தபடியே மழை பெய்யும் தெருவை பார்த்துக் கொண்டிருந்தார் ஆகா அகில்.
தொலைவில் ஒரு உருவம் மழைக்கு பயந்து ஒதுங்க இடம் தேடிக்கொண்டிருந்தது. உற்றுப் பார்த்தால் அது முல்லா.
முல்லா நேராக ஆகா அகிலின் வீடுநோக்கித்தான் வந்தார்.
முகமன் கூறிய முல்லாவை நோக்கி, என்ன முல்லா நஸ்ருதீன், அன்றொருநாள் மழைக்கி ஒதுங்கிய என்னிடம், சுவர்க்கத்து சுனை நீரைப் பருகுங்கள். பயந்து ஒதுங்காதீர்கள் என்று உபதேசம் கூறினீர். இன்று ஏன் இப்படி ஓடி ஒளிகிறீர்கள் என்றார் ஆகா அகில்.
'சொர்க்கத்து சுனை நீரை என் காலால் மிதித்து அதை மாசு படுத்திவிடக் கூடாது ' என்பதற்காக இப்படி ஓடி ஒதுங்கிறேன் என்றார் முல்லா, சாவதானமாக.
முல்லாவின் பேச்சைக் கேட்டு, காய்ச்சலில் நொந்ததை விட இப்போதுதான் அதிகமாக வருத்தப்பட்டார் ஆகாஅகில்.
இன்றும் இப்படிப்பட்ட முல்லாக்கள் இருக்கிறார்கள். அவர்களைச் சொல்லி குற்றமில்லை. நாம்தான் ஆகாஅகிலாக இருக்கக்கூடாது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக