வெள்ளி, ஜனவரி 25, 2008

பதில் சொல்லட்டும் புலிகள்!

துன்பியல் சம்பவத்தை மறக்க முயல்கிறேன் - மீடியா உலகம்
எதிர்பார்த்த பேட்டியில் புலித்தலைவர் பிரபாகரன், இந்தியப்
பிரதமர் ராஜீவ்காந்தியை கொன்றது குறித்து கூறிய கூற்று மேற்கண்டது.

இன்று மீண்டும் ஒரு துன்பியல் நிகழ்வை தமிழகத்தில் ஏற்படுத்தும்
நோக்குடனோ அல்லது தங்கள் பழிதீர்க்கும் படலத்தின் களமாய் தமிழகத்தை பயன்படுத்தும் நோக்குடனோ புலிகளின் செயல்பாடு அமைந்து வருவது உற்றுநோக்கத்தக்கது.

சென்னையில் கைதான புலிகளின் உளவுப்பிரிவுத் தலைவர் நாதன் என்கிற சுருளி என்கிற தம்பித்துரை பரமேஸ்வரன் போலீஸாருக்கு கொடுத்த வாக்குமூலத்தில், இலங்கை தமிழ் தலைவர் வரதராஜ பெருமாள், டக்ளஸ் தேவானந்தா மற்றும் அவரது உதவியாளர் யோகராஜ் ஆகியோரை கொல்வதற்காக ததன அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தானில் தங்கியிருக்கும் வரதராஜப் பெருமாளை அவரது மகள் திருமணத்தின்
போதும், டக்ளஸ் தேவானந்தா, யோகராஜ் ஆகியோர் தமிழகத்துக்கு வரும்போது கொலை செய்ய இருந்ததாகவும், அதற்கான கூட்டுசதிகள் நிறைவேற்றப்பட இருந்ததாகவும் பரமேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இலங்கைத் தமிழர்கள் என்றாலே பாசம் காட்டி வரும் காரணத்தால் தமிழகத்தை தங்களின் கடத்தல் கேந்திரமாக புலிகள் ஆக்கிவருவதும், பண மோகம் காரணமாக சட்டமீறல்களை செய்யும் சிலரை துண்டுகோலாக்கி தமிழக இளைஞர்களை தங்களின் அத்துமீறலுக்கு பயன்படுத்தும் நோக்கம் இவர்கள் போலீஸாரால் கைது செய்யப்படும்போது நமக்கு விளங்குகிறது.

இன்று உலகளவில் தமிழினம் பெயர் பெறக்காரணமானவர்களில் புலிகள் முக்கியத்துவம் பெற்றிருக்கிறார்கள் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

தமிழகத்தில் இவர்கள் மேற்கொள்ளும் ஒரு சில நடவடிக்கைகள் நமக்குள் பிளவுகளை ஏற்படுத்தி விடக்கூடுமோ என்ற அச்சம்தான் மேலோங்கி நிற்கிறது.

நிலம் நீச்சை விட்டு, சொந்த பந்தங்களை விட்டு உயிருக்காக தமிழகத்தில் அடைக்கலமாகும் நாடு புகுந்தோர்களுக்கும் புலித் தரப்பினரின் நடவடிக்கைகள் இன்னலை விளைவிப்பதாகத்தான் உள்ளது.

ஆனால் இதுவரை புலிகளின் தரப்பிலிருந்து தமிழக போலீஸாரால் கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கோ, பரமேஸ்வரன் கைது தொடர்பாகவோ எந்த விளக்கமும் தெரிவிக்கவில்லை. அங்கு நிகழும் போர் காரணமாகவோ அல்லது உள்ளடி வேலைகளின் வினனயின் காரணமாகவோ விளக்கம் தெரிவிக்காமை இருக்கலாம் என்பது நம் எண்ணம்.

புலிகளின் மேல் தமிழர்கள் கொண்டுள்ள அன்பு நீடிக்க வேண்டும் என்றால் இதுபோன்ற சட்ட மீறல், அத்துமீறல் நிகழ்வுகளை நிச்சயமாக அவர்கள் தமிழகத்தில் செயல்படுத்தக்கூடாது என்பது என்போன்ற பலரின் எண்ணம்.

கருத்துகள் இல்லை: