இது எந்த அமைப்புக்கும் எதிரான கருத்து அல்ல. ஒரு உண்மைச் சம்பவம்.
ராமகிருஷ்ணா மடம்! உலகெங்கும் பக்தர்களைக் கொண்டிருக்கும் உன்னதமான இந்த மடத்தின் சார்பில் பல்வேறு நலப்பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. எத்தனையோ லட்சக்கணக்கான மக்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பயன் பெற்று வருகிறார்கள் இந்த அமைப்பின் உதவியால்.
குறைந்த செலவில் தரமான சிகிச்சையை தரும் ராமகிருஷ்ணா மடத்தின் மருத்துவமனையின் மூலம் சிகிச்சை பெற்றதால் நானும் பலனை அனுபவித்திருக்கிறேன்.
தினகரன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் 2004-ம் ஆண்டு என் உடல் உபாதைக்காக முதன் முறையாக மருத்துவ சிகிச்சை பெற்றேன். முதல் முறையாக மயிலாப்பூரில் ஆர்.கே. மடம் சாலையில் அமைந்துள்ள அந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சென்றேன். எப்படி மருத்துவச் சீட்டு போட வேண்டும் என்பது தொடங்கி, எந்த அறையில் மருத்துவரை பார்க்க வேண்டும், வரிசையில் மருந்துகள் பெற வேண்டும் என்று அங்கிருந்த மடத்தின் களப்பணியாளர்கள் கூறிய கூற்றுகள் நான் உடல் உபாதையிலிருந்து பாதி அளவு மீண்டதைப் போல் உணர்ந்தேன்.
அதே போன்று மருத்துவர்களைச் சந்தித்தேன். அவர்களும் இன்முகமாகப் பேசிய, நோயின் தன்மை அறிந்து மருந்து, மாத்திரைகளைச் சாப்பிட்டேன். முற்றிலுமாக குணமடைந்தேன்.
எனக்கு தெரிந்தவர்களிடம் எல்லாம் ராமகிருஷ்ணா மடம் மருத்துவமனைக்கு செல்லுங்கள், அங்கு நல்ல முறையில் சிகிச்சை மேற்கொள்கிறார்கள். குறைந்த கட்டணம்தான் என்று பாராட்டினேன்.
......
மீண்டும் கடந்த சில தினங்களுக்கு முன் திடீரென வயிற்றில் ஏற்பட்ட உபாதைக்காக பழைய நம்பிக்கையுடன் ராமகிருஷ்ணா மடம் மருத்துவமனையை அணுகினேன்.
நம்பிக்கை பழைமையாகி, நடைமுறைகள் புதுமையாகி விட்டது. களப்பணியாளர்கள் 'கடமை'க்காகப் பணியாற்றினார்கள்.
சந்தேகங்கள் கேட்டாலும் பதிலில் அலட்சியம் தென்பட்டது. புதிய மருத்துவர்கள் இருந்தனர். ஆனால் பழைய மருத்துவர்களைப் போல பரிவு காணப்படாவிட்டாலும் 'கடமை +' ஆகப் பணி செய்தார்கள். எனக்கு வயிற்று உபாதைக்காக ஸ்கேன் செய்யச் சொல்லியிருந்தார்கள்.
கட்டணம் கட்டினேன்.
'' மறுநாள் ஸ்கேன் செய்ய வேண்டும். காலை 10 மணிக்கு இரண்டு இட்லி சாப்பிடவேண்டும். 12 மணி வரை தண்ணீர் குடித்துக் சிறுநீர் கழித்துக் கொள்ளலாம். 12 மணி தொடங்கி 2 மணி வரை 15 டம்ளர் தண்ணீரைக்குடித்து கொண்டு மருத்துவமனைக்கு வரவேண்டும்.''
கட்டணம் கட்டிய இடத்தில் கூறப்பட்ட அறிவுரை.
சரியாக 2 மணிக்கு வந்தேன். தகவல் என்ற பலகை வைக்கப்பட்டிருந்த மேஜை காலியாக இருந்தது. வெளி வராண்டாவில் என்னைப் போல் இருந்தார்கள். ஸ்கேன் என்பது எனக்கு புதிதான நடைமுறை. கட்டணம் கட்டிய இடத்தில் இருந்த் ஒரு பெண்ணிடம் தகவல் கேட்டேன்.
''மேடம் ஸ்கேன் செய்ய வரச்சொல்லியிருந்தார்கள்...
எத்தனை மணிக்கு?
2 மணிக்கு மேடம்...
மணி எத்தனையாவுது....
2 மேடம்.
வெளியே நில்லு...
எதுக்காக மேடம்...
கேள்வி கேட்கக்கூடாது... சொன்னதைச் செய்...''- அவர்கள் இருக்கும் பணிநிலைக்கும், பேச்சுக்கும் சம்பந்தமேயில்லை.
(டாக்டர் வந்தபின் உள்ளே அழைப்பார்கள். வெளியே இருங்கள் என்றால் இருக்கப்போகிறோம். மனதுக்குள் முணுமுணுத்தபடி வெளியே வந்தேன்)
தண்ணீர் குடித்ததால் சிறுநீர் கழிக்க வேண்டிய அவஸ்தையில் இருந்தேன். என்னைப் போல் ஸ்கேன் செய்யவந்தவர்களும் இருந்தார்கள்.
(கண் பரிசோதனைக்கும் நிறைய பேர் வந்திருந்தார். அங்கிருந்த ஒரு நடுத்தர வயது களப்பணியாளர் அனைவரையும் போ, வா என்று ஒருமையில் கூறிக்கொண்டிருந்ததைப் பார்க்கையில் அரசு மருத்துவமனைகளில் நடைபெறும் நிகழ்வுகள் மனதுக்குள் வந்து சிரிப்பை மூட்டியது.)
சில நிமிடங்கள் கழிந்தன. உள்ளே அழைத்து பெஞ்சில் அமர வைத்தார்கள். வயது முதிர்ந்த பெண் களப்பணியாளர் வந்தார். ஸ்கேன் செய்வதற்கு முந்தைய நிகழ்வுகள் குறித்து சில தகவல்களைச் அமைதியாக எடுத்துக் கூறினார்.
மூன்று மணி நெருங்கிய பின்னர் பெண் மருத்துவர் வந்தார். அவரது 'கடமையை' செய்தார். மாலையிலேயே ஸ்கேன் முடிவுகளைக் கொடுத்தனர். அந்த முடிவுகள் குறித்து சொல்வதற்கு ஆள் இல்லை. மறுநாள் வந்து மருத்துவரை பார்க்க வேண்டும்.
மறு நாள் வந்தேன். மருத்துவரை சந்தித்தேன். ஸ்கேன் ரிசல்ட்டை கொடுத்தேன். படித்தார், வயிற்று வலிக்காக சென்றேன். ஸ்கேன் ரிசல்ட்டில் ஈரல்(லிவர்) பிரச்னை என்று காட்டியது. இதை உறுதி செய்வதற்காக மேலும் சில டெஸ்ட்டுகளை எடுக்கக் சொன்னார்கள் மருத்துவர்.
சரி அதையும் எடுத்துவிடுவோம் என்று மீண்டும் கட்டணம் கட்டும் இடத்தில் வரிசையில் நின்றேன்.
எனக்கு முன் ஒரு பெண். அவருக்கு முன் ஒரு ஆண், வயதான ஒரு பெண். வயதான பெண்ணிடம்
கட்டணம் கட்டும் இடத்தில் அவரிடம் விலாசம் கேட்டனர். சரிவர சொல்லத்தெரியாத அந்தப் பெண் வெளியில் நின்றிருந்த ஒரு பெண்ணை அழைத்தார். அவர் வந்து விலாசம் எழுதி வைத்திருந்த காகிதத்தை அந்த வயதான பெண்ணிடம் கொடுத்து விட்டு மீண்டும் வெளியில் சென்று விட்டார். இந்த இடைவெளியில் அந்த வயதா பெண்ணுக்கு அடுத்து நின்ற ஆண் சீட்டைக் கொடுத்துவிட்டார்.
அந்த வயதான பெண்ணை மீண்டும் வரிசையில் வரும்படி சொல்லி அனுப்பி விட்டனர். அவர் கூறியும் ஏற்கவில்லை. கேட்டால் பப்ளிக் பிகேவியர் என்று பதிலடி. விடாத அந்தப் பெண் அங்கிருந்த காவி சட்டையும், வேட்டியும் அணிந்திருந்த மடப் பணியாளரிடம் கேட்டும் அவரும் மீண்டும் வரிசையிலேயே வரச் சொல்ல அந்தப் பெண் செய்வதறியாது மீண்டும் வரிசையிலேயே சென்றுவிட்டார்.
இப்போது அந்த ஆண் கட்டணம் கட்டுகிறார். அடுத்தது என் முன் நின்ற பெண். அடுத்து நான். இதனிடையே கட்டணம் கட்டும் இடத்திலிருந்த மற்றொரு கவுண்டரில் கட்டணம் கட்ட வருமாறு அங்கிருந்த பெண் அழைத்தார்.
எனக்கு முன்னிருந்த பெண் செல்லவில்லை. நான் சென்று விட்டேன். ஆனால் என்னிடம் , அந்த எனக்கு முன்னிருந்த பெண்தான் வரவேண்டும் நீ ஏன் வந்தாய் என்று பணியிலிருந்த பெண் சொல்லியதோடு மீண்டும் வரிசையில் வா என்று அனுப்பி விட்டார்.
நான் எடுத்துச் சொல்லியும் கேட்கவில்லை.
நான் மீண்டும் அந்தக் காவி உடை அணிந்திருந்தவரிடம் (அவரை சாது என்று அழைக்க எனக்கு மனம் வரவில்லை) சென்று நியாயம் கேட்டேன். பப்ளிக்கில் ஒழுங்காக பிகேவ் பண்ணு. வரிசையில் வா என்று கூறிவிட்டார்.
நான் நன்றி சொல்லிவிட்டு வெளியேறி விட்டேன். நியாயங்கள் எடுபடாத ராமகிருஷ்ணா மட மருத்துவம்னையிலா, மடத்திலா?
விடை தெரிந்தவர்கள் கூறுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக