அண்ணா, குழந்தைக்கு பால் வாங்கிக் கொடுக்கணும்ன்னா காசு கொடுன்னா...
ஒட்டிய உடலோடு, கந்தல் நிறைந்த சேலையைக் கட்டிக்கொண்டு, கசங்கிய மலராய் ஒரு குழந்தையை கையில் வைத்தபடி மதிய வெயிலில், சிக்னலில் நின்று அவள் பிச்சை கேட்ட போது, அந்த காருக்குப் பின்னால் சைக்கிளில் நின்று கொண்டிருந்த என் மனசு கனத்தது।
கார்க்காரரோ அவளை விரட்டாத குறையாக விரட்டிக் கொண்டிருந்தார்। என்னைத் தாண்டி, என் பின்னால் நின்ற கார்க்காரனிடம் சென்று பிச்சை கேட்டாள்। நான் என் பையிலிருந்து ஐந்து ரூபாயை எடுத்து கொடுக்க முயலும் முன் சிக்னல் விழ, அந்தப் பாதையை கடந்து சென்றேன்।
சே... அந்த அம்மாவுக்கு ஐந்து ரூபாயை கொடுக்க முடியாமல் போய்விட்டதே என்ற வருத்தம் எனக்குள் அதிகரித்திருந்தது। அடுத்த முறை கண்டிப்பாய் சிக்னலில் பார்த்தாள் காசு கொடுக்க வேண்டும்।
என் அம்மாவின் நினைவு வந்தது। அவள் தாயா? இவள் தாயா? என்னைப் பெத்ததும், ஏதோ அனாதை ஆசிரமத்தில் போட்டுவிட்டுப் போய்விட்டாள்। ஆனால் இந்தத் தாயோ தன் பிள்ளையை எப்படியும் வளர்க்க வேண்டும் என்று வேகாத வெயிலில் சிக்னலில் பிச்சை எடுத்தாவது காப்பாற்றி வருகிறாள்। கொடுத்த வைத்த குழந்தை...
நினைக்க நினைக்க என் தாய் மீதான கோபம் அதிகரிக்கத்தான் செய்தது।
ஆசிரமத்திலிருந்து வளர்ந்து ஏதோ கொஞ்சம் படித்து, பருவ வயதை அடைந்ததும் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு, ஒரு ஹோட்டலில் வேலைக்கு சேர்ந்து, திண்பதும், தூங்குவதும் அங்கேதான்। ஏதோ மாதச்சம்பளத்தில் நான் வளர்ந்த ஆசிரமத்துக்கும் கொஞ்சம் கொடுத்துத்தான் வந்தேன்।
நினைவுகளோடு அந்த நாள் மூழ்கிப் போனது।
அன்று வாரவிடுமுறை தினம்। பொழுதுபோவதற்காக ஓட்டல் நண்பர்களுடன் சினிமாவுக்குப் போனேன்। கருத்த பட்சிகள் என்கிற மலையாள படம்। மம்மூட்டி நடித்தது। மனைவியை இழந்த கணவன் தன் மூன்று பிள்ளைகளுடன் வாழும் யதார்த்த வாழ்க்கைதான் படம்। இதில் ஒரு குழந்தைக்கு பார்வை குறைபாடு। அந்தக்குழந்தை வானத்தை பற்றி, நிலாவைப் பற்றி, நட்சத்திரத்தைப் பற்றி எல்லாம் மம்மூட்டியிடம் கேட்கும்போதெல்லாம், நம்ம குழந்தையாய் இருந்த போது எழுந்த இதுமாதிரியான கேள்விகள் ஆயிரம் இருக்குமே என்று தோன்றியது।
படத்தில் நவ்யா நாயர் சிக்னலில் குழந்தையுடன் பிச்சை எடுக்கும் கேரக்டரில் நடித்திருப்பார்। அதை பார்த்ததும் நான் சிக்னலில் கண்ட பெண்ணை போலவே தோன்றியது।ஆனால் படத்தில் அதுபோல் ஏமாற்றி பிழைப்பு நடத்துவதாக இருக்கும்। எனக்கு அதில் உடன்பாடு இல்லை। அந்தப் பெண் தன் குழந்தைக்காக எப்படி கஷ்டப்படுகிறார்। படத்தில் நடிப்பு என்கிறார்களே என்று தோன்றியது।
டிர்ர்ர்ர்ர்ர்ரிங்.... சப்தத்தோடு படத்தின் இடைவேளை।
அங்கிருந்த கேண்டினில் நண்பர்களுடன் டீ , சமோஷா சாப்பிட்டுக் கொண்டிருந்தேன்। என் அருகில் ஒரு ஆணும், பெண்ணும் நின்று குசுகுசு குரலில் பேசிக் கொண்டிருந்தார்கள்। கொஞ்சம் கூர்ந்து கவனித்ததில் அந்தப் பெண்.... ஆம் அதே பெண்தான்। சிக்னலில் குழந்தையுடன் பிச்சை எடுத்துக் கொண்டிருந்தவள்தான்।
அவர்கள் பேசியதை கேட்ட எனக்கு திக்கென்றது।
இன்னாம்மா இன்னிக்கு தொழிலுக்கு போலீயா...
இல்லயா, தொழிலுக்கு கொண்டுவந்த கொயந்த செத்துப் போச்சு। அடுத்த கொயந்த இன்னும் கெடைக்கல। அதேன்.....
பெத்த குழந்தையை காசுக்காக இந்த மாதிரி பிசாசுகளிடம் கொடுத்த கொலை செஞ்ச தாயை விட, ஆசிரமத்தில் போட்டுவிட்டு சென்ற என் தாய் உண்மையிலேயே தெய்வம்தான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக