அம்மா என்னோட மேத்ஸ் புக்க எங்கன்னு தெரியலம்மா... ஸ்கூலுக்கு நேரமாயிட்டு இருக்கும்மா... பள்ளியூனிபார்மின் அழுத்தத்தில் முக்கல் முனகலாக வார்த்தை வெளியே வந்து கொண்டிருந்தது.
ஏம்மா நேத்து ஹோம் ஒர்க் செஞ்சுட்டு அப்படியே தூங்கிட்ட. அந்த புக்க எடுத்து உன்னோட கப்போர்ட்லதாம்மா வச்சேன். பார்த்து எடுத்துக்க... சமையலறையில் மதிய உணவை டிபன் பாக்ஸில் வைத்தபடியே சாந்தி சத்தம் கொடுத்தாள்.
கப்போர்ட்... அம்மாவின் வாய் மொழிந்த வார்த்தை பிரியாவை சில நொடிகள் உறைய வைத்தது. அம்மா கப்போர்ட்ல புக்ஸ வச்சுட்டு மட்டும் வந்தாங்களா, இல்லை அந்த போட்டோக்களை பார்த்து விட்டார்களா? குழப்பத்தோடு கப்போர்ட்டுக்கு வந்தவள் மேத்ஸ் புக் அங்க இருந்ததை எடுத்துவிட்டு், கலக்கத்துடன் பள்ளிக்கு கிளம்பினாள்.
பிரியா பள்ளிக்கு போனதும், அம்மாவும் தன் அலுவலகத்துக்கு வேலைக்கு கிளம்பிவிட்டாள்.
கதவைப் பூட்டி சாவியை தன் கைப்பையில் வைத்தவள் தெருமுனையில் நின்றிருந்த, வாடகை வேனில் ஏறினாள்.
ஏற்கனவே வண்டிக்குள் இருந்த அவளது அலுவலகப் பணிப் பெண்கள் வாசித்துக் கொண்டிருந்த கந்தர்சஷ்டி கவசத்துக்குள் தன்னை இனணத்தபடி வாய் முணுமுணுத்தாலும், பிரியாவின் கப்போர்டில் தான் பார்த்த போட்டோதான் அவள் மனசுக்குள் சுழன்றடித்தது.
கந்தர்சஷ்டி கவசம் முடியவும், அவளது அலுவலகத்தைவேன் அடையவும் சரியாக இருந்தது.
புஷ்பா... அலுவலகத்தில் மட்டும் இல்லை வேனிலும் சாந்தியின் அருகில் அமர்ந்து வருபவள்.
சாந்தி, தேவையில்லாத கதைகளைப் பேச வேண்டாம்னுதான், நாம் வேனில் கந்தர்சஷ்டி கவசம் பாடி வருகிறோம். வழக்கமா சுருதி கூடியிருக்கும் உன் குரலில் இன்னைக்கு ஏன் சுரத்தே இல்லாமல் இருந்தது _ பதில் தேடி கேள்வியை வீசினாள் புஷ்பா.
மவுனம் மட்டுமே சாந்தியின் பதிலாக இருந்தது.
மத்தியானம் அரைநேரம் விடுப்பு போட்டுவிட்டு சீக்கிரமாகவே வீடு திரும்பியிருந்தாள் சாந்தி.
நாம செஞ்சது சரிதானே... அப்புறம் ஏன் கவலைப்படணும்... இதுமாதிரியான ஆள்கூட வாழுறதை விட தனியாவே இருந்து சாதிக்கலாம். நாமும் படிச்சிருக்கோம், வேலை பார்க்க முடியும். அப்புறமும் ஏன் இந்த கொடுமையான வாழ்க்கை... தினமும் குடி, சந்தேகம்னு நரக வாழ்க்கை வாழுறதை விட டைவர்ஸ் வாங்கினாள் என்ன. தீர்மானித்தபடியே டைவர்ஸ் வாங்கினாள். ஒரே மகளை அழைத்துக் கொண்டு, சென்னை வந்தவள் தன் நண்பிகளின் மூலமாக ஒரு வேலையை ஏற்படுத்திக் கொண்டு இலட்சிய வாழ்க்கை வாழ்ந்து வந்தாள்.
தன் மகளிடமும் குடும்ப நிலவரத்தை சொல்லி சொல்லித்தான் வளர்த்தாள். பிரியாவும், அம்மாவின் முகம் கோணாமல் வளர்ந்தாள், படித்தாள். அப்பாவையும் தெரிந்து, அப்பாவின் ஆக்கமும் தெரிந்த பிரியாவா இப்படி...
அப்பாவின் போட்டோவை எடுத்து கப்போர்ட்டுக்குள் வைத்திருக்கிறாள். நாம் என்ன வளர்த்தாலும்... நினைக்க நினைக்க சாந்தியின் கண்களில் கண்ணீர் வழிந்தது.
பள்ளி முடிந்து திரும்பிய பிரியா , வீட்டுக்கதவு ஏற்கனவே திறந்திருப்பது அறிந்து மெதுவாக உள்ளே நுழைந்தாள்.
விசும்பிய கண்களுடன் அம்மா இருப்பதை கண்டு அவள் அருகே மெதுவாக அமர்ந்தாள்.
அம்மா என்னை மன்னிச்சுடும்மா. அந்த போட்டோவை உங்ககிட்ட சொல்லாம வச்சிருந்தது தப்புதான்.
முந்தாநாள் பள்ளிக்கூடத்திலிருந்து 'ஆதரவற்றோர் இல்லத்துக்கு" கூப்பிட்டுப் போனாங்க. அங்க ஆதரவற்ற நிலையில் நோய்நொடியில் அப்பா இருக்கிறதப்பார்த்தேன். ஆனா அவருக்கு நான் யாருன்னு தெரியலம்மா.
அவரு உங்களுக்குப் பண்ணுன கொடுமைகளை கூட இருந்த பார்த்ததாலே அந்த ஆளுமேல எனக்கு பரிதாபமே வரலம்மா. இன்னும் வைராக்கியம்தாம்மா அதிகமாச்சு.
இந்த வைராக்கியம் குறையக்கூடாதுன்னுதான் அவர் போட்டோவ என் கப்போர்ட்ல வச்சேன். தினம்தினம் அந்தப் போட்டோவ பார்க்கும்போது எனக்கு இன்னும் சாதிக்கணும்னு வேகம் வரும்மா. அதான் வச்சேன் என்னத் தப்பா நெனச்சுக்காதீங்கம்மா.
மகளின் பதில் கொடுத்த சந்தோஷம் சாந்திக்குள் இன்னும் தன்னம்பிக்கையை அதிகரித்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக