ஞாயிறு, ஜூலை 27, 2008

ரைட்கால்!

சென்னையை கலக்கிய சைக்கோ கொலைகாரன் பிடிபட்டான்... போலீஸ் கமிஷனர் பெருமிதம்.... பத்திரிகைகளில் கொட்டை எழுத்துக்களில் வெளியான செய்தி படித்ததும் பொதுமக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டார்கள். குறிப்பாக செக்யூரிட்டிகள்.
போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கமிஷனருக்கு பாராட்டுகள் குவிந்துகொண்டிருந்தன.
டிரிங்....டிரிங்.... கதறிக் கொண்டிருந்த டெலிபோனின் ரிசிவரை காதருகே கொண்டு செல்ல கரகர குரல் கீறிச்சிட்டது.
என்ன கமிஷனர் எந்த மாங்கா மடையன்மாட்டினான். சைக்கோன்னு முத்திரை குத்தி உள்ள அனுப்பிட்டு பந்தாவா இருக்கீங்க. இனிமே போலீஸ்காரங்க என்ன செய்றாங்கன்னு யாரும் கேட்கப்போறதில்ல. அடுத்தாப்ல ஏதாவது புதுசா தொடர்கொலைன்னு கேஸ் வந்தாத்தான் உங்களுக்கு வேலை. அதுவரைக்கும்...
டேய் யார்டா பேசுறது... கமிஷனர் கத்தலில் எதிர்முனையில் ரிசீவர் சாத்தப்பட்டது.
டிரேஸ் செய்து பார்த்ததில் சைக்கோ கொலைகள் நடந்ததாகக் கூறப்படும் வடபழனி ஏரியாவின் ஒரு பப்ளிக் பூத் நம்பர் என்று தெரிந்தது.
காவல்துறை இரவும் பகலும் முடுக்கி விடப்பட்டது...
டேய் நில்லுடா... நீ யார்... போலீஸ்காரர்கள் மடக்கியது ஒரு குல்பி வியாபாரியை.
சார், நான் இந்த ஏரியாத்தான் சார். குல்பி வியாபாரம் செய்ய ராத்திரிக்கு தான் சார் வருவேன்.
சரி, சரி போய் வியாபாரத்தை பாரு. நாங்க வேற ஒருத்தனை தேடிக்கிட்டு இருக்கோம்.
தேடுங்க... தேடுங்க... தேடிக்கிட்டே இருங்க. போலீஸ்காரங்க ஒழுங்கா ரோந்து வந்தாத்தானே நாங்களும் திருட்டு பயம், வழிப்பறி இல்லாம நிம்மதியா வியாபாரம் பண்ண முடியும். கமிஷனரை கொஞ்சம் கலக்கிய தைரியத்தில் குல்பி வியாபாரி தன் வியாபாரத்துக்கு சென்று கொண்டிருந்தான்.

கருத்துகள் இல்லை: