குறிப்பு: இது யாரையும் குறிப்பிடுவது அல்ல!
இன்னும் சில நிமிடங்கள் தான். சாத்தான்குளம் பேருந்து நிலையத்தை வண்டி அடைந்து விடும். அப்புறம், அழைக்கும் ஆட்டோக்கார நண்பர்களுக்கு முறுவலிப்புடன் வேண்டாம் என்று தலையை ஆட்டி, பேக்கை கையில் மாட்டியபடியே ஊரை பார்த்தபடியே நடந்து வீட்டுக்கு செல்லலாம்...
புஷ்ஷ்ஷ்ஷ்.... பெரிய சீறலோடு பஸ்ஸின் டயரிலிருந்து காற்று பீறிட்டது. சாத்தான்குளம் கருகமேனி ஆற்று தரைப்பாலத்தில் வண்டி நின்று விட்டது.
இன்னும் ஒரு கிலோமீட்டர்தான் சாத்தான்குளம் பேருந்து நிலையம். லேசான எரிச்சல் மனநிலை இருந்தாலும், பரவாயில்லை இங்கேயிருந்தே ஊரைச் சுற்றிப்பார்த்தபடி புளியடி மாரியம்மன் கோயில் வழியாகச் சென்று, நான் படித்த தூய இருதய மேல்நிலைப்பள்ளியையும், தூய இருதய மாதா ஆலயத்தையும் பார்த்தபடியே என்னுடைய வீடிருக்கும் வடக்கு பள்ளிவாசல் தெருவுக்கு சென்று விடலாம் என்று நடக்கத் தொடங்கினேன்.
முன்னதாக பஸ்சிலிருந்து இறங்கிய உடனேயே வீட்டுக்கு அலைபேசியில் தகவல் தெரிவித்து விட்டேன்.
அந்த கரிசல் பூமியின் வெம்மையை மனதுக்குள் ரசித்தபடியே நடக்கத் தொடங்கினேன்.
புளியடி மாரியம்மன் கோயிலுக்கு சொந்தமான விளையாட்டுத் திடலில் உடற்பயிற்சியும், ஓட்டப்பயிற்சியுமாக சிலர் இருந்தார்கள்.
என்னைப்பார்த்து விட்டு ஒருவன் ஓடி வந்தான். மக்கா எப்படி இருக்கே.
பார்த்திபன்.
மிகவும் நல்ல நண்பன், இயற்கையின் ரசிப்பில் தன்னை ஈடுபடுத்திக் கொள்வதால் படிப்பில் கொஞ்சம் தள்ளி நின்றே கவனிப்பவன்.
ஏழாம் வகுப்பு படிக்கும்போது, வகுப்பறையில் ஒரு நீர்க்குருவி கட்டிய கூட்டை , அதிலிருந்து குஞ்சுடன் எடுத்துக்காட்டி, அதற்கு இறையளித்து அந்த இடத்திலேயே அப்படி வைத்தவன்.
குளத்துக்கருகே இருந்த குட்டையில் எனக்கு மீன்பிடிக்க கற்றுத்தந்தவன். சனி, ஞாயிறுவிடுமுறைகளில் குளத்து வழியாக அமுதுண்ணாக்குடி வரை நடந்தே சென்று குருவி, கிளி, கொக்கு பிடித்து வந்ததை பெருமையாகச் சொல்லும்போது, எனக்குள் கோபம் வரும். நம்ம வாப்பா, அம்மா நம்மள எங்கயும் போக உடமாட்டேங்குறாங்க. ஒருநாள் கஷ்டப்பட்டு தெப்பக்குளத்துல குளிக்கிறதுக்கு அனுமதி கெடச்சும், கையில பிளாஷ்டிக் மக்கோட தெப்பக்குள படியில நின்னு குளிச்சதை, என் கூடப்படிச்ச பசங்க பார்த்து கிண்டல் பண்ணுனதை இப்ப நெனசாலும் கொஞ்சம் அவமானமாத் தான் இருக்கும்.
.... மக்கா, என்னடா நான் கேட்டுக்கிட்டு இருக்கேன் பதிலக்காணம்.
நிகழ்காலத்துக்கு வந்த நான், நண்பனைத் தழுவிக் கொண்டேன்.
என்ன பார்த்தீபா, எப்படி இருக்கே. என்ன பண்ற, வீட்டுல எல்லோரும் எப்படி இருக்காங்க...
இதுவரை பார்க்காத ஒரு விரக்தியான சிரிப்பு பார்த்திபனின் முகத்தில் இருந்தது.
அவனது வார்த்தைகளில் கலந்து வந்த போதை வஸ்துவின் வாடை அவனுக்குள் சோகம் கப்பியிருப்பதை எனக்குள் அறிவுறுத்தியது.
மக்கா, திருப்பூரில் போய் வேலை பார்த்தேன். சம்பாதிச்சு குடும்பத்தைத் தான் காப்பாத்தினேன். கல்யாணமும் செஞ்சு வச்சாங்க. என்ன பண்றது நம்ம சம்பாத்தியத்துக்குள்ள குடும்பம் நடத்துற வகை தெரியல என் சம்சாரத்துக்கு. சண்டை சச்சரவுதான். கோபிச்சுட்டு அவங்க அப்பா வீட்டுலபோய் உட்கார்ந்துக்கிட்டா. சமாதானம் பண்ணிக்கூப்பிட்டும், பிறந்த வீட்டு சொகுசு வாழ்க்கைக்காக அங்கயே உட்காந்துட்டா. சரி பிள்ளைய பார்க்கலாம்னு போனாலும், காட்ட மாட்டங்குறா.
பிள்ளைய அவளே பாத்துக்கிடட்டும்னு, நான் ஊருக்கு வந்துட்டேன். இங்க வந்தா எல்லோரும் என்னையத்தான் சத்தம் போடுறாங்க.
வெறுப்பாயிட்டு மக்கா. திரும்பவும் வேலைக்கு போனா, வேலைக்கு சேக்கமாட்டேனுட்டாங்க. அதான் இப்ப நம்ம ஊருலேயே சந்தை யாபாரத்துக்கு போய்ட்டு வர்றேன். திங்கள் கிழமை உடன்குடி சந்தை, செவ்வாய் கிழமை நாசரேத், வியாழக்கிழமை நம்ம ஊரு, வெள்ளிக்கிழமை திசையன் விளை. நாலு சந்தைக்கு போனாலும் காசு வந்துருது.
பிள்ளைக்கு காசு கொஞ்சம் அனுப்பிட்டு, மீதிய என் கையில வச்சு செலவழிச்சிட்டு இருக்கேன் மக்கா...
ஏல பார்த்திபா, முள்ளுச்செடி புதருக்குள்ளயிருந்து சத்தம் வர, மக்கா நாளைக்கு பார்க்கலாம்னு சொன்னபடியே, பார்த்திபன் ஓடினான், கொஞ்சம் இருக்கும் அந்த வஸ்துவையும் சுவைத்துவிட...
பார்த்திபனை பார்த்து மனம் வருத்தப்பட்டது.
என்ன பார்த்திபன் தண்ணி அடிக்க ஆரம்பிச்சுட்டான், நான் பதிவு போட ஆரம்பிச்சிட்டேன். ஆனாலும் என் மனைவி, என் பிள்ளை என் கூடத்தான் இருக்காங்க.
சோகம் ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு வகையில்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக