யாரும் எழுப்பாததே என்னை ஆச்சர்யமாக எழ வைத்தது.
விழித்த கண்களில் மணி ஒன்பதை நெருங்கிக் கொண்டிருப்பதை தன் அசைவுகளின் வழியாக பெரிய முள்ளும், சிரிய முள்ளும் கடிகாரத்துக்குள் காட்டிக் கொண்டிருந்தது. கூடகூடவே சிவப்பு கலர் வினாடி முள்ளும் படபடத்தது.
சூரியனுக்கு எப்போதுமே என்னைவிடச் சூட்டிப்பு ஜாஸ்திதான். எப்போதுமே என்னைவிட அதுதானே முதலில் எழுந்துவிடுகிறது.
கால்களை தரையில் வைத்தபோது உச்சிமுதல் உள்ளங்கால் வரை சிலிர்த்தது. தரையில் ஈரம் படர்ந்திருந்தது.
வெள்ளிக்கிழமை என்றாலே தரையைக் கூட்டிப் பெருக்கி வீட்டை கழுவிவிடுவது வாடிக்கை.
அன்றைக்கும் அறையை கழுவி விட்டுச் சென்றிருக்கிறார்கள்...
மெதுவாக ஈரத்தில் கால் பதித்து அறையை விட்டு வெளியே வந்தேன்.
அப்பாவின் அறைக்கதவு மூடப்பட்டிருந்தது. வேலைக்குப் போய்விட்டார்...
அப்பப்பபா...
இடி அமீன், ஹிட்லர், முசோலினி என ஒரு பெரிய சர்வாதிகார கும்பலே அப்பாவுக்குள் மொத்தமாய் குடியிருக்கிறது. அதைச் செய்யாதே, இதைச் செய்.... அதைத்தான் சாப்பிடனும்... நான் தர்ற டிரஸைத்தான் போடனும்... இன்னும் என்னெவெல்லாமோ..... தன் சுய ஆர்வத்தை, அதிகாரத்தை வீட்டில் ஒவ்வொருவர் மீதும் திணிப்பதிலே அவருக்கு ஒரு திருப்தி. நான் மட்டும் சம்பாதிச்சுக் கொண்டுவந்து கொட்டலேன்னா... அடுத்த வேளை பூவாவுக்கு கையைத்தான் ஏந்தணும்.... கான்வெண்ட்டுல மட்டும் இல்ல கவருமெண்ட் ஸ்கூல்ல கூட படிக்க முடியாது... இப்ப நீங்க இருக்கிற நல்ல நிலைமைக்காக நான் என்ன கஷ்டப்பட்டிருக்கேன் தெரியுமா? வழக்கமான அப்பாக்களின் வரிசையில் எனது அப்பா மட்டும் விதிவிலக்கா என்ன?....
வீடும் முக்கியமாக சமயலறை மட்டுமே அம்மாவின் சாம்ராஜ்யம். வாயில்லாப் பூச்சி... அப்பா வாங்கிக் கொண்டு வரும் பொருட்களை பயன்படுத்தி சமைப்பதோடு, அவர் வாங்கித் தரும் துணிமணிகளை மட்டுமே கட்டிப்பார்ப்பவர். அவருக்கே அவருக்கான உணர்வுகள் உரிமைகள் என்று எதுவும் கிடையாது.
ஏம்மா இப்படி இருக்க... கொஞ்சமாவது உன்னோட ஆசைகளையும் அப்பாக்கிட்டச் சொல்லுமா? எப்படிம்மா அந்த பாடாவதி மாடல் புடவையைக் கட்டிக்கிட்டு இருக்கே... இப்போதான் புதுசு புதுசா சேலை டிசைனெல்லாம் வருதே அத வாங்கிக் கட்டிக்கிட்டா என்ன? இரும்மா நான் சம்பாதிக்கும் போது உனக்கு பட்டுப்புடவையா வாங்கிக் கொடுத்து ராணி மாதிரி பார்த்துப்பேன். வேலைக்கு எல்லாம் ஆளுதான்... பெருமையாக பீற்றிக் கொள்வேன்...
என்ன சொன்னாலும் சரி அம்மாவிடமிருந்து ஒரு புன்னகை மட்டும்தான் பதிலாக வரும்... அது அவரின் இயலாமையின் வெளிப்பாடா அல்லது என்னைப் பற்றிய பெருமிதமா அல்லது அப்பா குறித்தான நகையாடலா.... எனக்குத்தான் புரிபடவில்லை...
இப்போதும் அம்மா சமையலறைக்குள்... வெண்டைக்காயை நறுக்கிக் கொண்டிருக்கிறாள் ... தன் கணவருக்கு பிடித்த பொறியல் வைப்பதற்காக...
பிரஸில் டூத் பேஸ்ட்டை வைத்து வாய்க்குள் திணித்தவனாக பாத்ரூமுக்குள் செல்கிறேன்.
மணி பத்து... உடைகளை மாற்றிக் கொள்கிறேன்...
டைனிங் டேபிளில் இருந்த இட்லியை எடுத்துச் சாப்பிடுகிறேன்.
அம்மாவிடம் சொல்லிக் கொண்டு போக நினைத்து சமையலறைக்குள் நுழைந்தாள் அம்மா இல்லை. பாத்ரூமுக்குள் தண்ணீர் சத்தம்.
குளிக்கிறார்கள்...
அம்மா போய்ட்டு வருகிறேன்
பைக் சாவி நினைவு வந்து என் அறைக்குச் செல்கிறேன். அங்கு பைக் சாவி இல்லை. பைக்கிலேயே வைத்து விட்டோமோ...
வேகவேகமாக வெளியே வந்து பார்த்தேன். பைக்கை காணோம்.
அப்பா எடுத்துட்டுப் போகமாட்டார்... பைக்கை எங்கே... யோசித்துக் கொண்டிருக்கும் போதே
கொஞ்ச தூரத்தில் அப்பா வந்து கொண்டிருந்தார்.
இன்னைக்கு வேலைக்குப் போகலையா?
அப்பாவுக்கு பின்னால் ஒரு மெக்கானிக். அவர் என் பைக்கை தள்ளிக் கொண்டு வந்தார்.
அப்பா எப்போ என் பைக்கை...
அம்மாவும் வாசலுக்கு வந்துவிட்டார்.
ஏம்மா என் பைக்கை அப்பா கொண்டுட்டு வர்றார்.
என் கேள்விக்கு அம்மாவிடமிருந்து விடையில்லை. அவர் முகத்தில் மெல்லிய சோகம்.
பைக்கை வீட்டு வாசலில் நிறுத்தி விட்டு மெக்கானிக் போய்விட்டார்.
அப்பா, அம்மாவின் முதுகில் கை வைத்தபடி மெதுவாக வீட்டுக்குள் வந்து கொண்டிருந்தார்.
அப்பா என்னாச்சு என் பைக்குக்கு... அப்பா.... அம்மா... என் கதறல் அவர்களை ஒன்றுமே செய்யவில்லை.
மெதுவாக பூஜை அறைக்குள் அம்மாவுடன் நுழைந்தார் அப்பா...
ஓடிச் சென்று எட்டிப்பார்த்தேன்.
அம்மாவின் மடியில் குழந்தை போல அப்பா அழுது கொண்டிருந்தார். எவ்வளவு தடவை சொல்லியிருக்கேன். எம்புள்ளைமே்ல என்னையவிட அதிகமா யாருடி அக்கறையும் பாசமும் காட்டமுடியும்................ இன்னும் என்னவெல்லாமோ பிதற்றிக் கொண்டிருந்தார்.
குலுங்கி அழுத அப்பாவை பார்ப்பதை விட அதிர்ச்சியாயிருந்தது நிமிர்ந்து பார்த்தபோது என் போட்டோவுக்கு மாலை போடப்பட்டிருந்தது!
2 கருத்துகள்:
Superb !
Good flow and Good turn.
பெரும்பாலான வீடுகளில் நிகழ்கிற எதார்த்த வாழ்வை சொல்லியவிதம் இயல்பாக இருந்தது.எதிர்பாராத விதமாக இருந்தது இறுதி சோகம்!
- ரியாஸ்
கருத்துரையிடுக