பொலபொலவென்று ஒருவாரமாக அழுத வானம் தன் நீலக் கூந்தலுக்கு வெண்மேக ஷேம்பு போட்டபடி சிரித்துக் கொண்டிருந்தது.
அடியே சண்டாளி, இப்படிப் பண்ணிப்புட்டியேடி.... உன் ஆதங்கம் அடங்குற அளவுக்கு அழுது தொலைச்சிட்டு, எங்க வயலு வரப்பெல்லாத்தையும் இப்படி தண்ணிக்காடாக்கிட்டியடி. விளைஞ்சி நின்ன உளுந்தெல்லாத்தையும் இப்படி உயிரோட உறிஞ்சிட்டியடி...
ஜலசமாதியான உளுந்து பயறை கையில் பிடித்தபடி வானத்தை பார்த்து தன் வறுமையை வசவுகளாக்கிக் கொண்டிருந்தான் சின்னையன்.
நான் என்ன நாலுகாசு பாக்கணும்னா விவசாயம் பண்றேன், என் வயிறு நெறஞ்சா போதும், மானம் மருவாதயோட ஒழச்சி பிழைக்கணும்னுதானடி வெள்ளாமை பண்றேன். அதவந்து காவு வாங்கிட்டியே.
இதுக்காக நான் கடனுக்கு வாங்குன பணத்தை எப்படி அடைக்கப்போறேன். எப்படி என் பொண்டாட்டி பிள்ளைகளை காப்பாத்தப் போறேன், இப்படி பண்ணிட்டியடி....
கலங்கிப் போய் கிடந்தவனின் தோளில் கை விழ திரும்பிப் பார்த்தான். பொன்னையன் அங்க நின்னுக்கிட்டிருந்தான். டேய் நம்ம சோகத்தை தீர்க்குறதுக்குதான் மந்திரி வந்திருக்காரு. வா அவருகிட்ட போவோம். நிவாரண உதவி தருவாரு.
நாளைய முதல்வர், வருங்கால பிரதமர்.. அவர்... இவர்.. அண்ணன்... தொண்டரடிபொடியின் பிளிறல்கள் காதைக் கிழித்தன.
சின்னான் இங்க வாங்க. மழையில பாதிக்கப்பட்டதா சொன்னாங்க. கவலைப்படாதீங்க, உங்கள மாதிரி பாதிக்கப்பட்டவங்கள கைகுடுத்து தூக்கி விடுறதுதான் நம்ம அரசாங்கம். இந்தாங்க நிவாரண நிதி வச்சிக்க. செக் நீட்டப்பட்டது. பிளாஷ் ஒளியில் சின்னானு, மந்திரியும் சிரித்தார்கள்.
மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மந்திரி நிதிஉதவி... 8 காலம் தலைப்பில் செய்தி வெளியானது.....
சார்! ஷாட் ஓ.கே...
அரசோட சாதனைப் பட்டியல் விளம்பரப் படத்துல இந்தக்காட்சியை சேர்த்துருங்க.....
கட்டளை போட்டபடி மந்திரி காரில் ஏறிப் போனார்.
கண்டிப்பா உனக்கு பியூன் போஸ்டிங் தந்துருவாங்க... விவசாயி சின்னாண்டியாக நடித்தவருடன் பேசியபடி செட்டைவிட்டு சென்றார் பொன்னையனாக வந்த டைரக்டர்.
.... வானம் தன் நீலக் கூந்தலுக்கு வெண்மேக ஷேம்பு போட்டபடி சிரித்துக் கொண்டிருந்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக