சனி, செப்டம்பர் 10, 2011

ஞாயிறு, டிசம்பர் 19, 2010

முற்பகல் செய்யின்...

ஸ்பெக்ட்ரம்... இந்திய ஆட்சியாளர்களின் ஊழலை உலகத்துக்கே வெளிச்சம் போட்டுக் கொண்டிருக்கிறது இந்தச் சொல்லாடல். அதுவும் தமிழக ஆட்சியாளர்களின் அண்டர் கிரவுண்ட் வேலைகள் எந்த அளவில் எல்லாம் நடந்திருக்கிறது என்று திக்பிரமை பிடித்தவர்களாகி நடப்பதை எல்லாம் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் தமிழ் மக்கள். (பார்ப்பதோடு விட்டுவிடுவதுதான் 'மற'த்தமிழரின் குணம்)
எங்கப்பா கொண்டு போய் வச்சிருப்பாங்க... எத்தனை பேரு பங்கு போட்டுருப்பாங்க... இவர் ஒருத்தர் மட்டுமா செஞ்சிருப்பாரு... மேல இருக்கிறவங்க ஆசி இல்லாம இதெல்லாம் முடியாதே... ஆளுக்கொரு கேள்விகளை எழுப்பிக் கொண்டிருக்கிறார்கள். இந்த 1.76லட்சம் கோடி இருந்தால் 13 வருஷத்துக்கு தமிழக மக்களுக்கு இலவச ரேசன் பொருள் தரலாம்... இந்திய ரயில்வே பட்ஜெட்டுக்காக 5 முறை ஒதுக்கலாம்... உலக வங்கியில் இருக்கும் கடன் தொகையை கழித்து விடலாம்..... இப்படியெல்லாம் ஆலோசனை எல்லாம் சொல்லியும் கொண்டிருக்கிறோம்.
''ஏற்கனவே செய்த வழிமுறைப்படிதான் நாங்களும் செய்தோம்'' என்று சம்பந்தப்பட்டவர்கள் சொல்லும் சால்ஜாப்புகளை ஒரு கணக்குக்காக எடுத்துக் கொண்டால் இந்தியா 20 ஆண்டுகளுக்கு முன்பே வல்லரசாகி இருக்குமோ என்று என்னைப் போல ஏமாளிகளும் யோசித்துக் கொண்டிருக்கிறான்.
எத்தனையோ இத்யாதிகளை நாம் பேசிக் கொண்டிருந்தாலும், தமிழக ஆட்சியாளர்களின் தற்போதைய கவலை எல்லாம் அடுத்த தேர்தலைப் பற்றியதாகத்தான் இருந்து கொண்டிருக்கிறது... எப்படி மீண்டும் தன் குடும்ப ஆட்சியைக் கொண்டு வருவது என்று தி.மு.க. தலைவரும், எப்படியாவது தனது ஆட்சியைக் கொண்டு வந்து விடவேண்டும் என்று அ.தி.மு.க. தலைமையும் போராடி வருகிறது. இந்தியாவுக்கு ராஜாவானாலும், தமிழகக் கூஜா காங்கிரஸும் யாருடன் கூட்டணி வைப்பது என்று யோசித்துத்தான் தனது அஸ்திரத்தை ஸ்பெக்ட்ரம் வழியாக தற்போதைய தமிழக ஆட்சியாளரை அலைக்கழித்து வருகிறது.
இலங்கைத் தமிழனத்தை காவு கொடுத்த காங்கிரஸ் கட்சிக்கு வக்காலத்து வாங்கிய தி.மு.க. ஆட்சியாளர்களே, இன்று அதே காங்கிரஸ் உங்களை காவு வாங்கிக் கொண்டிருக்கிறது. முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்...